
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட குண்டு துளைக்காத வாகனம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
மேற்படி வாகனம் தொடர்புபட்ட நிறுவனம் மூலம் நேற்று (3) திருப்பி அனுப்பப்பட்டதாக, மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான மனோஜ் கமகே அறிக்கையொன்றின் மூலம் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதிகளின் சலுகைகளை ரத்து செய்யும் சட்டம் நடைமுறைக்கு வந்தமையை அடுத்து, மஹிந்த ராஜபக்ஷவின் அனைத்து உத்தியோகபூர்வ வாகனங்களும் உத்தியோகபூர்வ இல்லமும் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதியின் செயலாளர், கடந்த செப்டம்பர் 24ஆம் திகதியன்று அறிவித்ததாகவும் மனோஜ் கமகே அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியுடன் இணைக்கப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளின் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட பயணிகள் வாகனமும் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலைமையானது மஹிந்த ராஜபக்ஷவின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் அவரின் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

“மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்குத் தேவையான வாகனங்களைக் கோருவதற்காக அடுத்த வாரம் பொலிஸ் மா அதிபர், பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பாதுகாப்புப் படைத் தலைவர்களைச் சந்திப்போம் என்று நம்புகிறோம்” என்றும் அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.


