தலைப்புச் செய்திகள்

அக்கரைப்பற்று மாநகர சபை ஊழியர் கடந்த வாரம்; கொழும்பு மாநகர சபை பணியாளர் நேற்று முன்தினம் போதைப் பொருள்களுடன் கைது

ஹெரோயின், ஐஸ் போதைப்பொருள் ஆகியவற்றை கொழும்பு மாநகர சபை ஊழியர்களுக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில், அந்த சபையின் அலுவலக உதவியாளர் ஒருவரை – வலான குற்றத் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் தனது அலுவலக அறையில் நீண்ட காலமாக ஹெராயின் மற்றும் ‘ஐஸ்’ ஆகியவற்றை சூட்சுமமாகப் பொதி செய்து, கொழும்பு மாநகர சபை ஊழியர்களுக்கு விநியோகித்து வந்தார் என்று பொலிஸார் கூறியுள்ளனர்.

சந்தேக நபரின் அலுவலகம் கெம்பல் பூங்காவுக்கு அருகிலுள்ள – கொழும்பு மாநகர சபைக்கு சொந்தமான கட்டிடத்தில் அமைந்துள்ளது.

கிடைத்த தகவலின் பேரில், வலான குற்றத் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் நேற்று முன்தினம் (22) சோதனை நடத்தி, சந்தேக நபரிடமிருந்து 20 கிராமுக்கும் அதிகமான ஹெராயினை மீட்டனர்.

38 வயதுடைய சந்தேக நபர் – பொரல்ல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கடடந்த வாரம் அக்கரைப்பற்று மாநகர சபையில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் பெருந்தொகை கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டமை குறிப்பிடப்பட்டது. மாநரக சபைக்குச் சொந்தமான ‘அதாஉல்லா அரங்கம்’ எனும் கட்டடத்தினுள் குறித்த கஞ்சாவை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியிருந்தனர்.