தலைப்புச் செய்திகள்

மூன்றடி வரை வளர்ந்திருந்த கஞ்சா செடித் தோட்டம்: உடவலவை தேசிய பூங்காவிற்குள் கண்டுபிடிப்பு

உடவலவை தேசிய பூங்காவிற்குள் கஞ்சா தோட்டமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று, வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பனஹடுவ தள பாதுகாப்பு அலுவலகத்தின் வனவிலங்கு அதிகாரிகள் நேற்று (17) நடத்திய ரோந்துப் பணியின் போது, இந்தக் கஞ்சா தோட்டம் கண்டுபிடிக்கப்பட்டது.

கண்டுபிடிக்கப்பட்ட தோட்டத்திலுள்ள கஞ்சா செடிகள் சுமார் மூன்று அடி உயரம் வரை வளர்ந்திருந்தன என்றும், அந்த இடத்தில் கஞ்சா சாகுபடியில் ஈடுபட்டிருந்த இருவர் கைது செய்யப்பட்டனர் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த நடவடிக்கையின் போது – ஒரு சட்டவிரோத துப்பாக்கி, வெடிமருந்துகள், தோட்டத்துக்கு நீர் வழங்குவதற்குப் பயன்படுத்தப்படும் இயந்திரம், அதற்கு மின்சாரம் வழங்க பயன்படுத்தப்படும் ஒரு சூரிய சக்தி மின்சா உற்பத்தி தொகுதி உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.

இதனையடுத்து, சான்றுப் பொருட்களுடன் சந்தேக நபர்கள் – எம்பிலிப்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன் போது சந்தேக நபர்கள் அனைத்து குற்றச்சாட்டுகளையும் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டனர்.