தலைப்புச் செய்திகள்

ஆற்றங்கரையோரத்தில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையங்கள்: சம்மாந்துறை பொலிஸார் முற்றுகை

– தில்சாத் பர்வீஸ் –

ஆற்று ஓரத்தில் – பல காலமாக சூட்சுமமான முறையில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையங்கள் இரண்டினை, சம்மாந்துறை பொலிஸார் நேற்று (17) சுற்றி வளைத்து முற்றுகையிட்டனர்.

அம்பாறை மாவட்டம் – சம்மாந்துறை பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட , மல்வத்தை திருவள்ளுவர் பகுதியில் உள்ள ஆற்று ஓரத்தில் பல காலமாக சூட்சுமமான முறையில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றும், பழைய வளத்தாப்பிட்டி பெரிய கொக்க நாரை பகுதியில் உள்ள ஆற்று ஓரத்தில் பல காலமாக சூட்சுமமான முறையில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையமும் இவ்வாறு முற்றுகையிடப்பட்டது.

சம்மாந்துறை பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, சூட்சுமமான முறையில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை – அவர்கள் முற்றுகையிட்டனர்.

இதேவேளை, கசிப்பு உற்பத்தி நிலையத்தை நடத்தி வந்தார் எனச் சந்தேகிக்கப்படும் நபர் தப்பியோடியுள்ளார். அவரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கசிப்பு உற்பத்திற்கு தயாராக இருந்த உபகரணங்கள் மீட்கப்பட்டு, சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த கைது நடவடிக்கையானது கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசாரின் ஆலோசனைக்கு அமைய, சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.எம். நௌபரின் வழிகாட்டுதலில், சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி என். றிபாய்டீன் தலைமையிலான குழுவினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.