தலைப்புச் செய்திகள்

கல்முனை மற்றும் சாய்ந்தமருது உள்ளூராட்சி சபைகளின் வட்டார எல்லைகளை நிர்ணயிப்பதற்கான குழு நியனம்

கல்முனை மாநகர சபை மற்றும் சாய்ந்தமருது நகர சபை ஆகியவற்றின் வட்டார எல்லைகளை நிர்ணயிப்பதற்கான தேசிய குழுவொன்றை அரசாங்கம் நியமித்துள்ளது.

பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஏ.எச்.எம்.எச். அபேரத்ன இந்தக் குழுவை நியமித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ், அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக 2026 நொவம்பர் 5ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள – அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் 19ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ள இக்குழுவில் ஐந்து பேர் இடம்பெற்றுள்ளனர்.

குழுவின் தலைவராக எம்.கே.எஸ்.எஸ். ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளதுடன், உறுப்பினர்களாக கே. தவலிங்கம், எம்.எம். மொஹமட், கே.எம்.டி.எஸ்.டி. கருணாரத்ன மற்றும் ஓ.டி.எம்.ஐ. திலகரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கல்முனை மாநகர சபை மற்றும் சாய்ந்தமருது நகர சபை ஆகியவற்றுக்கான வட்டார எல்லைகளைத் தீர்மானிப்பதே இக்குழுவின் பிரதான பணியாகும்