
சீன வர்த்தகர் ஒருவரை – சீன நாட்டவர்கள் குழுவொன்று கடத்தி – தாக்கிய பின்னர் விடுவித்துள்ளனர். இந்தச் சம்பவம் கடந்த 22ஆம் திகதி நடந்ததாக கொள்ளுபிட்டி பொலிஸார் நேற்று தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர் தற்போது தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
ஓகஸ்ட் 22 ஆம் திகதி இரவு 7.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை கொள்ளுப்பிட்டியில் உள்ள தொழிலதிபரின் பல்பொருள் அங்காடிக்குள் இந்தக் குழு நுழைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடத்தல்காரர்கள் 02 வேன்களில் வந்து தன்னை அவற்றில் ஒன்றில் வலுக்கட்டாயமாக ஏற்றிச் சென்றதாக பாதிக்கப்பட்டவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் அவரின் கண்கள் கட்டப்பட்டு, கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அடையாளம் தெரியாத இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட பின்னர், அவர் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர்கள் மொபைல் செயலி மூலம் 10 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பணத்தை வழங்கும்படி கட்டாயப்படுத்தியதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.




