தலைப்புச் செய்திகள்

ரணில் நாளை நீதிமன்றில் ஆஜராக முடியாமல் போகலாம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை 26ஆம் திகதி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட வேண்டிய போதிலும், அவரின் தற்போதைய உடல்நிலை காரணமாக – நீதிமன்றத்தில் ஆஜராக முடியாமல் போகும் என்று, வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர் என்று, டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

அடுத்த மூன்று நாட்களுக்கு மருந்து மற்றும் ஓய்வு எடுக்குமாறு ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, கொழும்பு தேசிய மருத்துவமனையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறியதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த நாட்களில் அவருக்கு நீரிழப்பு ஏற்பட்டதாகவும், இதனால் இதயத் துடிப்பு அதிகரித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. மருத்துவ பரிசோதனைகளில் தலைவலி போன்ற அறிகுறிகளுடன் சிறுநீரக அளவுருக்கள் (kidney parameters) அதிகரித்துள்ளதாகவும் தெரியவந்தது.

“தற்போது அறிகுறிகள் மிகவும் தீவிரமாக இல்லை என்றாலும், சிக்கல்கள் ஏற்பட்டால், அவரது நிலை மோசமாகலாம்” என்று அந்த அதிகாரி கூறினார். “சரியான சிகிச்சையுடன், அவர் குணமடையக்கூடும், ஆனால் அடுத்த மூன்று நாட்களுக்கு அவருக்கு ஓய்வு மற்றும் மருந்து தேவை” எனவும் அவர் குறிப்பிட்டார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அவரை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (ICU) மாற்ற வைத்தியர்கள் முடிவு செய்துள்ளனர்.