தலைப்புச் செய்திகள்

08 கோடி ரூபாய் வரி செலுத்துமாறு, அல்லி ராஜாவுக்குச் சொந்தமான ‘விஷ் ப்ரோட்காஸ்டிங்’ நிறுவனத்துக்கு உத்தரவு

சுபாஷ்கரன் அல்லிராஜாவுக்குச் சொந்தமான ‘விஷ் ப்ரோட்காஸ்டிங்’ (‘Wish Broadcasting) நிறுவனத்துக்கு, 80 மில்லியன் ரூபாய் வரி செலுத்துமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் உத்தரவிட்டுள்ளதாக, ஸ்ரீலங்கா மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் மூடப்பட்ட ‘மெனாரா டிவி’, ‘சித எஃப்எம்’, ‘ரெட் எஃப்எம்’, ‘தமிழ் எஃப்எம்’ மற்றும் ‘சிஆர்.ஐ’ ஆகியவற்றின் அலைவரிசைகள் – சுபாஷ்கரன் அல்லிராஜாவுக்குச் சொந்தமான ‘விஷ் ப்ரோட்காஸ்டிங்’ (‘Wish Broadcasting) நிறுவனத்தின் வசமிருந்தன.

தற்போது சுபாஸ்கரன் அல்லிராஜாவுக்குச் சொந்தமான ‘விஷ் ப்ரோட்காஸ்டிங்’ நிறுவனம், இலங்கையில் தனது நடவடிக்கைளில் இருந்து படிப்படியாக விலகுவதாகக் கூறப்படுகிறது. இதனால், தொடர்புடைய ஊடக நிறுவனங்களுக்கும் ‘ஸ்வர்ணவாஹினி’ தொலைக்காட்சி நிலையத்திற்கும் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியுள்ளதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சுபாஸ்கரன் அல்லிராஜாவுக்குச் சொந்தமான லைக்கா குழுமம் – பதினொன்றுக்கும் மேற்பட்ட ஊடக மற்றும் ஒளிபரப்பு உரிமங்களை மறைமுகமாக கையகப்படுத்தியமையை எதிர்த்து, சமூக ஆர்வலர் ஜமுனி கமந்த துஷார என்பவர், உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கு விசாரணையில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: லைக்கா குழுமத்துக்கு எதிரான மனு உச்ச நீதிமன்றில் விசாரணை