
பதினொன்றுக்கும் மேற்பட்ட ஊடக மற்றும் ஒளிபரப்பு உரிமங்களை லைக்கா குழுமம் மறைமுகமாக கையகப்படுத்தியதை எதிர்த்து, சமூக ஆர்வலர் ஜமுனி கமந்த துஷார என்பவர் தாக்கல் செய்த மனு இன்று (20) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஈஏபி (EAP) குழுமத்திற்குச் சொந்தமான உரிமங்கள் உட்பட ஊடக மற்றும் ஒளிபரப்பு உரிமங்களை லைக்கா குழுமம் கையகப்படுத்துவதில் இலங்கையின் சட்டத்தை மீறியதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதோடு, இது தேசிய பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதியரசர்கள் காமினி அமரசேகர, குமுதினி விக்ரமசிங்க மற்றும் சோபித ராஜகருணா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, இன்று ஆஜரான சில பிரதிவாதிகளுக்கு வரையறுக்கப்பட்ட ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய அனுமதி வழங்கியது. மேலும் இந்த வழக்கு விசாரணைக்கு மார்ச் மாதம் 27ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மனுதாரர் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி உதித எகலஹேவா மற்றும் சட்டத்தரணி என்.கே. அசோக்பரன் ஆகியோர் ஆஜரானார்கள்.
முன்னாள் சட்டமா அதிபர் (ஓய்வு பெற்ற) சஞ்சய் ராஜரத்தினம், ஜனாதிபதி சட்டத்தரணி சவேந்திர பெனாண்டோ, ஜனாதிபதி சட்டத்தரணி சந்தக ஜெயசுந்தர, மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் ஆகியோர் பிரதிவாதிககள் சார்பில் ஆஜரானார்கள்.
மனுவில் பெயரிடப்பட்ட 60 பிரதிவாதிகளில் லைக்கா குழும நிறுவனர் சுபாஸ்கரன் அல்லிராஜா, அவரின் மனைவி பிரேமதர்ஷினி அல்லிராஜா, கோவிந்தசாமி ஜெயசீலன், நிருதன் ராஜசுந்தரம் ஆகியோர் அடங்குவர்.



