
ஹமாஸ் அமைப்பினர் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்த நிலையில் மரணமடைந்த இஸ்ரேலியர்களின் நான்கு உடல்கள் – நான்கு சவப்பெட்டிகளில் வைக்கப்பட்டு, இன்று (20) சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரிடம் காஸாவில் வைத்து கையளிக்கப்பட்டன.
இறந்தவர்களின் உடல்கள் கையளிக்கப்பட்ட இடத்தில் பல்வேறு வகையான சுவரொட்டிகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
அதில் ஒன்றில், ‘காஸா மீதான இஸ்ரேலியப் போர் தொடங்கியதிலிருந்து 61,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 14,000 பேர் இன்னும் இடிபாடுகளுக்குள் உள்ளனர்“ என்பது உட்பட பல புள்ளிவிவரங்களை அந்தச் சுவரொட்டிகளில் ஒன்றில் எழுதப்பட்டிருந்ததாக அல் ஜசீரா ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மற்றொரு சுவரொட்டியில், ‘போர் குற்றவாளி நெதன்யாகுவும் அவரது நாஜி ராணுவமும் சியோனிச போர் விமானங்களின் ஏவுகணைகளால் அவர்களைக் கொன்றனர்’ என்று எழுதப்பட்டிருந்தது.
இஸ்ரேலிய கைதிகளை தங்கள் பாதுகாப்பில் வைத்திருக்க முயன்றதாகவும், ஆனால் காஸா மீதான போரை தொடர பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வலியுறுத்தியமையினால், இஸ்ரேலிய ராணுவத்தால் பணயக் கைதிகள் கொல்லப்பட்டதாகவும் ஹமாஸ் தெரிவித்துள்ளது.
நான்கு இஸ்ரேலிய கைதிகளின் உடல்களை ஒப்படைத்தது குறித்து, ஹமாஸ் வெளியிட்டுள்டள ஓர் அறிக்கையில்; ‘கைதிகளின் உயிரைப் பாதுகாத்தோம், அவர்களுக்கு எங்களால் முடிந்ததை வழங்கினோம், அவர்களை மனிதாபிமானத்துடன் நடத்தினோம். ஆனால் அவர்களின் ராணுவம் அவர்களை சிறைபிடித்தவர்களுடன் சேர்த்து கைதிகளையும் கொன்றது’ என்று தெரிவித்துள்ளது.
‘இன்று சவப்பெட்டிகளில் திரும்பிய கைதிகளின் உடல்களைப் பார்த்து குற்றவாளி நெதன்யாகு அழுகிறார். அவர்கள் கொல்லப்பட்டதற்கான பொறுப்பிலிருந்து தப்பிக்கும் அப்பட்டமான முயற்சியாகும்’ என்றும் ஹமாஸ் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இதனையடுத்து, செஞ்சிலுவைச் சங்கம் மூலம் ஹமாஸ் ஒப்படைத்த இறந்த கைதிகளின் உடல்களைப் பெற்று கொண்டதாக – இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது.
நெதன்யாகுவின் அலுவலகத்திலிருந்து ஒரு அறிக்கையில், இஸ்ரேல் “வீழ்ந்த நான்கு பணயக்கைதிகளின் சவப்பெட்டிகளைப் பெற்றுள்ளதாக” கூறியது.




