
– எம்.வை. அமீர் –
இப்னு கல்தூன் எழுதிய புகழ்பெற்ற நூலான ‘முகத்திமா’ (Muqaddimah) – சமூகவியல் துறையின் அடித்தளமாகக கருதப்படுவதாக, கத்தார் நாட்டின் ஹமத் பின் கலீபா பல்கலைக்கழக (Hamad Bin Khalifa University) பேராசிரியர் தீன் முகம்மத் தெரிவித்தார்.
“சமூகங்கள் எப்படி உருவாகின்றன, வளர்ச்சி பெறுகின்றன மற்றும் சிதையுகின்றன என்பதற்கான, ஒரு விஞ்ஞானக் கோட்பாட்டை அந்த நூல் மூலமாக – இப்னு கல்தூன் முன்வைத்தார்” எனவும் அவர் கூறினார்.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் கலாசார பீடத்தின் சமூகவியல் துறை ஏற்பாடு செய்திருந்த ‘இப்னு கல்தூன் மற்றும் சமூகவியலின் தோற்றம்’ எனும் தலைப்பில் – சிறப்பு அறிவியல் சொற்பொழிவாற்றிய போதே, பேராசிரியர் தீன் முகம்மத் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.
முன்னாள் உபவேந்தரும், சமூகவியல் துறை பேராசிரியருமான றமீஸ் அபூபக்கர் ஒருங்கிணைப்பில், நேற்று முன்தினம் (04) நடைபெற்ற இந்த நிகழ்வில், சமூகவியல் துறையின் தலைவர் கலாநிதி எம். றிஸ்வான் வரவேற்புரை நிகழ்த்தினார்.

இந்த நிகழ்வில் பிரதான பேச்சாளராக கத்தாரில் உள்ள ஹமத் பின் கலீபா பல்கலைக்கழகத்தின் (Hamad Bin Khalifa University) பேராசிரியர் தீன் முகம்மது கலந்துகொண்டார்.
இதன்போது, இஸ்லாமிய அறிஞர்களுள் ஒருவராகவும், வரலாறு மற்றும் சமூக ஆய்வுகளில் முன்னோடியாகவும் அறியப்படும் இப்னு கல்தூனின் (Ibn Khaldun) பங்களிப்புகளை – பேராசிரியர் தீன் முகம்மத் விரிவாக விளக்கினார்.
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள் மற்றும் ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்ட இந்த நிகழ்வில், இப்னு கல்தூனின் சிந்தனைகளை இன்றைய சமூகவியல் மற்றும் அரசியல் சூழலில் எவ்வாறு புரிந்து கொள்ளலாம் என்பதற்கான புதிய பார்வைகளை பங்கேற்பாளர்கள் பெற்றுக் கொண்டனர்.
இவ்வாறான கருத்துப் பரிமாற்றம் மற்றும் அறிவியல் உரைகள், மாணவர்களின் விமர்சனப் பயிற்சிகளை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், வரலாறு மற்றும் சமூகவியல் துறைகளுக்கிடையிலான சங்கிலித் தொடர்புகளையும் வெளிக்கொணர உதவுகின்றன என – நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் கூறினர்.
நிகழ்வின் இறுதியில், பேராசிரியர் தீன் முகம்மத் – நன்றி பாராட்டி ஏற்பாட்டுக் குழுவினரால் கௌரவிக்கப்பட்டார்.








