
தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார், இலங்கை வரலாற்றில் நாடாளுமன்ற வாக்கெடுப்பு மூலம் நீக்கப்பட்ட முதல் பொலிஸ் மா அதிபர் – இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து நீக்கும் திட்டம் மீதான விவாதத்தைத் தொடர்ந்து, இன்று (05) நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றது.
இதற்கு ஆதரவாக 177 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்தனர். எதிராக எவரும் வாக்களிக்கவில்லை.
தேசபந்து தென்னகோனுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட பிரேரணையில், கடும் தவறான நடத்தை, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் குற்றங்களுக்கு உடந்தையாக இருந்தமை அடிப்படையில் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரப்பட்டது.

அரசியலமைப்பு சபை நியமித்த – சிறப்பு நாடாளுமன்றக் குழு, தேசபந்து தென்னகோன் பொலிஸ் திணைக்களத்தில் எந்தவித பதவியையும் வகிக்கத் தகுதியற்றவர் என்று முன்னர் முடிவு செய்திருந்தது.
தேசபந்து தென்னகோன் முதன்முதலில் நொவம்பர் 2023 இல் பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டார். பின்னர், பெப்ரவரி 2024 இல் அந்தப் பதவியில் நிரந்தரமாக்கப்பட்டார்.
அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க – தேசபந்து தென்னகோனை நியமித்தார். இந்த நியமனத்திற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்ததோடு, அது அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று விமர்சித்தனர்.
தேசபந்து தென்னகோனை கடந்த ஆண்டு ஜூலை மாதம் உச்ச நீதிமன்றம், தற்காலிகமாக பணி நீக்கம் செய்தது.
2023 ஆம் ஆண்டு வெலிகமவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தற்போது அவர் பிணையில் உள்ளார்.


