
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கலந்து கொள்ளும் நிகழ்வொன்றில் வைத்து, அவர் மீது கைக்குண்டுத் தாக்குதலை நடத்த பெண் ஒருவர் திட்டமிட்டுள்ளதாகக் கூறி, பொலிஸ் அவசரப் பிரிவின் தொலைபேசி இலக்கத்துக்கு (119) தவறான தகவலை வழங்கியதாகக் கூறப்படும் நபரை, இன்று முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இபலோகம – ஹிரிபிட்டிகமவைச் சேர்ந்த மகேஷ் சதருவன் ரத்நாயக்க என்ற சந்தேக நபரையே, இவ்வாறு விளக்க மறியலில் வைக்குமாறு கெகிராவ நீதவான் உதாரி குணசேகர உத்தரவிட்டார்.
மத நிகழ்வொன்றின் போது – பெண்ணொருவர் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தத் தயாராகி வருவதாக சந்தேக நபர், பொலிஸ் அவசர சேவைக்குத் தெரிவித்ததாகக் கூறி, பொலிஸார் முன்னதாக நீதிமன்றத்தில் ஒரு பி-அறிக்கையை சமர்ப்பித்திருந்தனர். இருப்பினும், விசாரணைகளில் அந்தத் தகவல் பொய்யானது என்று தெரியவந்தது.
இதனையடுத்து சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, தனது மனைவி மீது கொண்ட வெறுப்பு காரணமாக, அவர் குறித்து பொய்யான விடயத்தை பொலிஸாருககு சொன்னதாக ஒப்புக்கொண்டார்.
குறித்த நிகழ்வுக்கு ஜனாதிபதி வருவார் எனும் எதிர்பார்ப்பில் – மேற்படி நபர் இந்தப் பொய்யான தகவலை பொலிஸாருக்கு வழங்கியுள்ளார்.



