தலைப்புச் செய்திகள்

மின்சார கட்டணம் 15% அதிகரிப்பு

மின்சாரக் கட்டணங்கள் 15% அதிகரிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாளை (ஜூன் 12) முதல் இந்த அதிகரிப்பு அமுலுக்கு வரும்.

முன்மொழியப்பட்ட கட்டணத் திருத்தம் குறித்து நடைபெற்ற பொது ஆலோசனைச் செயல்பாட்டின் போது பெறப்பட்ட எழுத்துபூர்வ மற்றும் வாய்மொழி சமர்ப்பிப்புகளை மதிப்பாய்வு செய்த பின்னர், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

கட்டண ஒழுங்குமுறை செயல்முறையின் அடிப்படையிலும், பிற முக்கிய காரணிகளைக் கருத்தில் கொண்டும் கட்டண உயர்வு செயல்படுத்தப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் மேலும் கூறியுள்ளனர்.

முன்னதாக, ஜூன் மாதம் தொடக்கம் டிசம்பர் வரையிலான காலத்துக்கு, இலங்கை மின்சார சபை (CEB) 18.3% கட்டண உயர்வைக் கோரியிருந்தது. இதற்கான முன்மொழிவைச் சமர்ப்பித்த மின்சார சபை, அதிகரித்து வரும் இயக்கச் செலவுகளை நிர்வகிப்பதும் முந்தைய கடன்கள் உட்பட கடனைத் திருப்பிச் செலுத்துவதும் அவசியம் என்று கூறியது.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு உரையாற்றிய பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமிதா குமாரசிங்க, ஆணைக்குழு சமீபத்தில் பல மின்சார கட்டணக் குறைப்புகளைச் செயல்படுத்தியுள்ளது என்றார்.

அதன்படி, மார்ச் 2024 : 21% குறைக்கப்பட்டதாகவும், ஜூலை 2024 : 23% குறைக்கப்பட்டதாகவும், ஜனவரி 2025 : 25% குறைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இன்று மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்ட போதிலும், ஜனவரி 2024 முதல் ஜனவரி 2025 வரை ஒப்பிடும்போது – கட்டணங்கள் 51% குறைந்துள்ளதாக தமித குமாரசிங்க கூறினார்.

“2014 இல், அலகு விலை ரூ. 21.39 ஆக இருந்தது. இன்றைய முடிவின் மூலம், அது ரூ. 27.80 ஆக அதிகரித்துள்ளது” எனவும் அவர் தெரிவித்தார்.