தலைப்புச் செய்திகள்

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தவிசாளர் பதவி; பகிர்ந்து வழங்குவதென மு.கா. தலைவர் தீர்மானம்: “எனக்கும் 06 மாதம் தாருங்கள்” – கேட்டுக்கெஞ்சிய றியா மசூர்

– மரைக்கார் –

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தவிசாளர் யார் என்பதைத் தீர்மானிக்கும் பொருட்டு, அந்தப் பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ள முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களை – அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் இன்று (05) கொழும்புக்கு அழைத்து கலந்துரையாடினார்.

இம்முறை நடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில், அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் எந்தவொரு உள்ளூராட்சி சபையிலும் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று ஆட்சியமைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, 18 ஆசனங்களைக் கொண்ட அட்டாளைச்சேனை பிரதேச சபையில், 08 ஆசனங்களை முஸ்லிம் காங்கிரஸ் வென்றுள்ளது. அந்த வகையில் அந்த சபையில் அதிக ஆசனங்களைப் பெற்றுக் கொண்ட தரப்பாக முஸ்லிம் காங்கிரஸ் மாறியுள்ளது.

இந்தப் பின்னணியில் அட்டாளைச்சேனை பிரதேச சபையில் 02 ஆசனங்களைப் பெற்றுள்ள ஏ.எல்.எம். அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸின் ஆதரவைப் பெற்று – முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைப்பதற்கு தீர்மானித்துள்ளது. இதன்பொருட்டு, தேசிய காங்கிரஸுடன் முஸ்லிம் காங்கிரஸ் பேச்சுவார்த்தைகளையும் நடத்தியுள்ளது.

இதனையடுத்து, முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு யாரை தவிசாளராக நியமிப்பது என்கிற வாதப் பிரதிவாங்கள் எழுந்துள்ளன. அட்டாளைச்சேனை பிரதேச சபையில் அதிக தடவை உறுப்பினராக இருந்தவரும் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான ஏ.எஸ்.எம். உவைஸ் – தவிசாளராக நியமிக்கப்பட வேண்டும் என, முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழு உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் விரும்புகின்றனர்.

மறுபுறத்தில் அட்டாளைச்சேனை பிரதேச சபையில் கடந்த முறை தவிசாளராகப் பதவி வகித்த ஒலுவிலைச் சேர்ந்த ஏ.எல். அமானுல்லாவும் – தனக்கு தவிசாளர் பதவி வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றார்.

இதனால், அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களை, சில தினங்களுக்கு முன்னர் அம்பாறைக்கு வருமாறு முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீம் அழைத்திருந்தார். இதன்படி அங்கு உறுப்பினர்கள் சென்றுள்ளனர். இதில் ஏ.எல். அமானுல்லா தனக்கு ஆதரவாகப் பேசுவதற்காக ஒலுவிலில் இருந்து ஒரு குழுவை அம்பாறைக்கு அழைத்துச் சென்றதாகவும், இதைத் தெரிந்து கொண்ட ரஊப் ஹக்கீம், உறுப்பினர்களைச் சந்திக்காமலேயே அம்பாறையிலிருந்து கிளம்பி விட்டார் எனவும் தெரியவருகிறது.

இதனையடுத்து முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்களை இன்றைய தினம் (05) கொழும்புக்கு அழைத்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம், அங்கு அவர்களுடன் – பிரதேச சபைத் தவிசாளர் பதவி தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது, அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் பதவியை அட்டாளைச்சேனைக்கும் ஒலுவிலுக்கும் தலா – இரண்டு, இரண்டு வருடங்களுக்கு வழங்குவதென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

ஆனாலும், முதல் இரண்டு வருடங்களைக் கொண்ட தவிசாளர் பதவியை – எந்த ஊருக்கு வழங்குவதென அங்கு தீர்மானிக்கப்படவில்லை.

இது இவ்வாறிருக்க மு.காங்கிரஸ் தலைவருடனான இந்தக் கலந்துரையாடலின் போது, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் பதவியை தனக்கும் 06 மாதங்களுக்கு வழங்குமாறு, பிரதேச சபைக்குத் தெரிவாகியுள்ள றியா மசூர் என்பவரும், ரஊப் ஹக்கீமிடம் கேட்டுக் கெஞ்சியுள்ளார்.

இதனையடுத்து, இவ்வாறு தவிசாளர் பதவியை சுழற்சி முறையில் வழங்குவதென்றால், தனது வட்டார மக்களை கௌரவிக்கும் வகையில், தனக்கும் தவிசாளர் பதவியை சிறிது காலம் வழங்குமாறு அந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்ட உறுப்பினர் அஸ்வர் சாலி – முஸ்லிம் காங்கிரஸ் தலைவரிடம் வேண்டுகோள் விடுத்தார்.

ஆனாலும் தவிசாளர் பதவியை யாருக்கு வழங்குது என, எவரின் பெயரையும் இந்தக் கலந்துரையாடலில் ரஊப் ஹக்கீம் குறிப்பிட்டுக் கூறவில்லை.

இவ்வாறான நிலையில் குறித்த கலந்துரையாடல் நிறைவுக்கு வந்ததாக, அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.