தலைப்புச் செய்திகள்

தென்கிழக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: முதல் நாளில் 1012 பேர் பட்டம் பெற்றனர்

– நூருல் ஹுதா உமர் –

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 17ஆவது பொது பட்டமளிப்பு விழா, நேற்று சனிக்கிழமை (03) பல்கலைக்கழகத்தின் பிரதான அரங்கில் ஆரம்பமானது.

பல்கலைக்கழகத்தின் வேந்தர் – ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி பாயிஸ் முஸ்தபாவின் முன்னிலையில் பதில் உபவேந்தர் யூ.எல். மஜீத் தலைமையில் நேற்று நடைபெற்ற முதல்நாள் விழாவில் 1012 பேர் பட்டங்களைப் பெற்றனர்.

அந்த வகையில், நேற்று முதல் நாளில் பிரயோக விஞ்ஞான பீடத்தில் 172 மாணவர்களும் பொறியியல் பீடத்தில் இருந்து  82 மாணவர்களும் தொழினுட்பவியல் பீடத்திலிருந்து 102 மாணவர்களும் கலை கலாச்சார பீடத்தில் இருந்து 314 மாணவர்களும் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடத்திலிருந்து 342 மாணவர்களும் பட்டங்களை பெற்றுக்கொண்டனர்.

முதலாம் நாள் முதல் அமர்வில் உச்ச நீதிமன்ற நீதிபதி  யசந்த கொடகொட பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இரண்டாம் அமர்வில் களனி பல்கலைக்கழகத்தின் பொருளாதார துறை பேராசிரியர் கலாநிதி சீதா.பி. பண்டார, மூன்றாவது அமர்வில் இலங்கைக்கான சவூதி அரேபிய நாட்டின் தூதுவர் காலித் ஹமூத் அல்-கஹ்தானி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை (04) இரண்டாம் நாளில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் – முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடத்திலிருந்து 378 மாணவர்களும் வெளிவாரி பட்டப்படிப்பு மாணவர்கள் (FAC & FMC) 687 மாணவர்களுமாக 2077 மாணவர்களும் பட்டங்களைப் பெறுகின்றனர்.

அந்த வகையில் மொத்த இரண்டு நாட்களிலும் 2077 மாணவர்கள் பட்டங்களைப் பெறுகின்றார்கள்.