தலைப்புச் செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, தேர்தல் ஆணைக்குழு தலைவரிடம் முறைப்பாடு

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்கவிடம் எழுத்துப்பூர்வ முறைப்பாடொன்றை சமர்ப்பித்துள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்தில் தனது பெயர் மற்றும் புகைப்படத்தை அனுமதியின்றிப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அந்த முறைப்பாட்டில் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அத்தனகல்ல தொகுதியிலுள்ள வேட்பாளர்கள் லசந்த அழகியவன்ன மற்றும் சரண குணவர்தன ஆகியோரின் புகைப்படங்களுடன், தனது புகைப்படமும் இணைக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்படுவதாக அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எந்தவொரு வேட்பாளரும் தனது பெயரையோ அல்லது புகைப்படத்தையோ எந்த வடிவத்திலும் பயன்படுத்த வேண்டாம் என்று – முன்னர் தான் அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது தேர்தல் சட்டங்களை மீறுவதாகும் என்பதால், இந்த நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.