
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா நடத்தி வரும் போரில், ரஷ்யாவுக்கு ஆதரவாக தமது நாட்டு படைகளை அனுப்பி வைத்ததாக வடகொரியாவின் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனம் இன்று (28) தெரிவித்துள்ளது.
மேலும், குர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைன் ராணுவம் கைப்பற்றிய ரஷ்ய பிரதேசத்தை – திரும்பப் பெறுவதற்கு தமது நாட்டு ராணுவம் பங்களித்ததையும் வட கொரியா முதன்முறையாக உறுதிப்படுத்தியுள்ளது.
வட கொரியாவின் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான, கொரிய மத்திய செய்தி நிறுவனத்துக்கு வடகொரிய அரசாங்கம் வழங்கிய அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரஷ்யாவுக்கும் வடகொரியாவுக்கும் இடையிலான பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் – ரஷ்யப் படைகளுடன் சேர்ந்து துருப்புக்களை போரில் ஈடுபடுத்தியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“உக்ரேனிய நவ-நாஜி ஆக்கிரமிப்பாளர்களை அழிக்கவும், ரஷ்ய ஆயுதப் படைகளுடன் இணைந்து குர்ஸ்க் பகுதியை விடுவிக்கவும்” வடகொரிய வீரர்கள் அனுப்பப்பட்டதாக கிம் ஜாங் உன் கூறியதாக மேற்படி அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
“நீதிக்காகப் போராடியவர்கள் அனைவரும் ‘ஹீரோ’க்கள், தாய்நாட்டின் மரியாதையான பிரதிநிதிகள்” என்று கிம் ஜாங் உன் கூறியதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட கொரியா “ரஷ்ய கூட்டமைப்பு போன்ற சக்திவாய்ந்த அரசுடன் கூட்டணி வைத்திருப்பதை ஒரு மரியாதையாகக் கருதுகிறது” என்றும் வட கொரியாவின் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான, கொரிய மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.



