
மோட்டார் சைக்கிள்களில் செல்லாமல், தலைக்கவசம் (ஹெல்மெட்) அணிந்திருப்பவர்களை உன்னிப்பாகக் கண்காணித்து – பரிசோதிக்குமாறு பொலிஸ் தலைமையகம் தலைமையகம் – நாடு முழுவதிலுமுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
துப்பாக்கிச் சூடு மற்றும் கொலை உள்ளிட்ட கடுமையான குற்றச் சம்பவங்களைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் தங்கள் அடையாளங்களை மறைக்க, முழு முகம் மறைக்கப்படும் வகையில் தலைக்கவசங்களைப் பயன்படுத்தியுள்ளனர். சட்டவிரோத நடவடிக்கைகளின் போது – அடையாளம் காணப்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, குற்றவாளிகள் தலைக் கவசங்களை (ஹெல்மெட்) பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் பின்னால் பயணிப்பவர்கள் இருவருக்கும் தலைக்கவசம் அணிவது ஒரு சட்டப்பூர்வ தேவை என்றாலும், அதன் நோக்கம் கண்டிப்பாக வீதி விபத்தின் போது பாதுகாப்பாக இருப்பதற்காகவே என்பதை பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.
அதன்படி, தனிநபர்கள் தேவையில்லாமல் தலைக்கவசம் அணிந்திருப்பதைக் கண்டால், குறிப்பாக அவர்கள் மோட்டார் சைக்கிள்களில் செல்லாதபோது அல்லது மோட்டார் சைக்கிள் அருகில் இல்லாதபோது, சந்தேகத்திற்கிடமான முறையில் செயல்படுவது போல் தோன்றினால், அவர்கள்தொடர்பில் பொலிஸார் தலையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் குற்றங்களைத் தடுப்பதற்கும் அத்தகைய நபர்களையும் அவர்களின் அனைத்து உடைமைகளையும் பரிசோதனை செய்ய அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று, பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
சமூகப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான ஒரு பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த நடவடிக்கைகளின் போது – பொலிஸாருக்கு பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.



