
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 53 மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
அரசியல் கட்சிகளால் தாக்கல் செய்யப்பட்ட 53 ரிட் விண்ணப்பங்களையும் 06 அடிப்படை உரிமைகள் மனுக்களையும் நீதிமன்றம் இன்று (04) தள்ளுபடி செய்துள்ளது.
நீண்ட விசாரணைக்குப் பிறகு, நீதியரசர்கள் மஹிந்த சமயவர்தன மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோரின் ஒப்புதலுடன், உச்ச நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா இவ்வாறு மனுக்களை தள்ளுபடி செய்தார்.
இந்த மனுக்கள் தொடர்பில் சட்டமா அதிபர் சார்பாக ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கனிஷ்க டி சில்வா, ஆட்சேபனைகளை எழுப்பியதோடு, மனுக்களை விசாரிக்க உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று வாதிட்டார்.
எனவே, மனுக்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்யுமாறு அவர் நீதிமன்றத்தைக் கோரினார்.
தீர்ப்பை வழங்கும்போது, சட்டமா அதிபர் எழுப்பிய ஆட்சேபனைகளை ஏற்றுக்கொண்டதாக நீதியரசர்கள் அமர்வு கூறியது.
இந்த நிலையில், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நிராகரிக்கப்பட்ட 37 வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளுமாறு இன்று மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ள சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பாக மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று தனது தீர்ப்பை வழங்கியது.
பிறப்புச் சான்றிதழ்களின் உறுதிசெய்யப்பட்ட நகல்களைச் சமர்ப்பிக்காமை, முறையாக உறுதி செய்து சமர்ப்பிக்காமை மற்றும் பிறப்புச் சான்றிதழ்களின் நகல்களை மட்டுமே சமர்ப்பித்ததன் அடிப்படையில் – தங்கள் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களால் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.



