தலைப்புச் செய்திகள்

அர்ச்சுனா எம்பியின் உரைக்கு நாடாளுமன்றில் தடை: தேசிய ஒற்றுமைக்கு தீங்கு விளைவிப்பதாகவும் சபாநாயகர் தெரிவிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனின் உரைகளை – அடுத்துவரும் 08 நாடாளுமன்ற அமர்வுகளின் போது நேரடியாக ஒலி/ஒளிபரப்புவதற்கு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தடை விதித்துள்ளார்.

நாடாளுமமன்றத்தில் இன்று (19) உரையாற்றிய சபாநாயகர், நேரடி ஒலி/ஒளிபரப்பு தடை நாளை (மார்ச் 20) முதல் அமுலுக்கு வருவதாகக் கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனின் உரைகள் நாடாளுமன்ற ஹன்சாட்-இல் இருந்தும் நீக்கப்படும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

அர்ச்சுனா ராமநாதனுக்கு எதிராக வந்த பல முறைப்பாடுகளைக் கருத்தில் கொண்டு, இன நல்லிணக்கத்திற்கு தீங்கு விளைவிப்பதைத் தடுக்க, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்.

“பெண்கள் மற்றும் நாடாளுமன்றத்திற்கு வெளியே உள்ளவர்கள், மதத் தலைவர்கள் உள்ளிட்டோரை- நாடாளுமன்றத்திற்கு ஒப்பற்ற தவறான மொழியில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் பேசியமை கண்டறியப்பட்டுள்ளது.

அவரின் பேச்சுக்கள் மற்றும் அறிக்கைகள் குறித்து எனக்கு தனிப்பட்ட முறையில் பல முறைப்பாடுகள் வந்துள்ளன. இவற்றினைக் கருத்தில் கொண்டு, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனின் அறிக்கைகள் நாடாளுமன்றத்திற்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளதாக நம்பப்படுகிறது.

எனவே, அவரின் அறிக்கைகள் தேசிய ஒற்றுமைக்கு தீங்கு விளைவிப்பதாகவும் நான் நம்புகிறேன்” என்று சபாநாயகர் குறிப்பிட்டார்.

பலமுறை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் தனது நடத்தையை சரிசெய்வதற்கான எந்த அறிகுறிகளையும் காட்டவில்லை என்றும், இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்தார்.

தொடர்பான பதிவு