
முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை எம்.எஸ்.எம். நளீம் – நேற்று (14) ராஜிநாமா செய்துள்ள நிலையில், அவருடைய நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை அவர் விரும்பும் நேரத்தில் வழங்குவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் தயாராக உள்ளது என, அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (14) உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.
”எமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம். நளீம் நேற்று தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்து விட்டு, உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்வந்துள்ளார். அவருடைய தியாக மனப்பான்மையினையும், கட்சிக்கான அர்ப்பணிப்பினையும் பாராட்டுகிறேன்.
இந்த சபைக்கு வந்த 04 மாதங்களில் அவர் சுறுசுறுப்பாக இயங்கி, தனது பிரதேசத்தின் குறைகளை இந்த சயைில் எடுத்துரைத்தார். அவர் கட்சித் தலைவருக்கு பக்கபலமாக இருந்தார். அவருடைய அரசியல் வாழ்க்கை சிறப்புற அமைய வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.
தனது நாடாளுமன்ற பிரவேசத்தை அவர் நினைக்கும் சந்தர்ப்பத்தில் வழங்குவதற்கு கட்சி தயாராக உள்ளது.
அது மட்டுமல்ல, கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விரும்பும் ஏனைய பிரதேச உறுப்பினர்களுக்கு நான் சொல்விக் கொள்வது என்னவென்றால்; நளீமைப் போன்று தமது அரசியல் அர்ப்பணிப்பைச் செய்வதற்கு ஏனையோரும் முன்வர வேண்டும். அமைப்பாளர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தவிசாளர்கள் போன்றோர் எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் வட்டாரத்தில் போட்டியிட்டு – கட்சிக்கு வெற்றியை ஈட்டுத்தந்த பின்னர், நாடாளுமன்ற ஆசனத்துக்கான தமது கோரிக்கைகளை முன்வைத்தால், அதை நிச்சயமாக கட்சி பரிசீலிக்கும்” என்றார்.
ஹக்கீமின் நாடாளுமன்ற உரை



