தலைப்புச் செய்திகள்

அர்ச்சுனா எம்.பியின் உரைக்கு சட்டத்தரணி சுவஸ்திகா கண்டனம்

நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் அர்ச்சுனா ராமநாதன், தனது நாடாளுமன்ற உரையில் பெண்ணொருவரை ‘விபச்சாரி’ என பெயர் சொல்லி கூறியமையை, பெண்கள் உரிமை மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் சட்டத்தரணி சுவஸ்திகா அருளிங்கம் கண்டித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் அர்ச்சுனா ராமநாதன், நாடாளுமன்றத்தில் ஒரு பெண்ணை ‘விபச்சாரி’ என்று கூறினார். நாடாளுமன்றத்தில் இதை யாராவது எதிர்த்தார்களா? அந்தப் பெண்ணின் பெயரை ‘ஹான்சாட்’ (hanzard) இல் இருந்து நீக்க வேண்டும் என்று கோரினார்களாக என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள சட்டத்தரணி சுவஸ்திகா;

‘டொக்டர் அர்ச்சுனா ராமநாதன் தனது நாடாளுமன்ற சிறப்புரிமையைப் பயன்படுத்தி பெண்களைத் துன்புறுத்துகிறார். நாடாளுமன்ற உறுப்பினராக தனது சிறப்புரிமையைப் பயன்படுத்தி முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பைக் கக்கி வருகிறார்’ எனவும் குறிப்பிட்டுள்ளார்.

‘இது நாடாளுமன்ற கலாச்சாரத்திற்குப் புதியதல்ல. ஆனால் ஒரு பெண்ணின் பெயர் தவறாக உச்சரிக்கப்படும்போது – அந்தக் கூற்றுக்களை ‘ஹான்சாட்’இல் இருந்து நீக்கப்படும் காலத்தில் நாம் இருக்கிறோம் என்று நினைத்தேன்’ எனத் தெரிவித்துள்ள அவர்; ‘இந்தச் சலுகைகள் நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களுக்கு மட்டும்தானா, ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு இல்லையா?’ என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

கிளிநொச்சி – ராமநாதபுரத்தைச் சேர்ந்த சாலினி எனும் பெண், YouTube மற்றும் டிக்டொக் ஊடாக விபச்சாரம் செய்து வருகிறார் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன், கடந்த 11ஆம் திகதி நாடாளுமன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அர்ச்சுனா எம்.பியின் இந்த உரைக்கு எதிராக ‘புதிது’ செய்தித்தளம் – தொடர்ச்சியாக குரலெழுப்பி வந்ததோடு, பெண் உரிமை ஆர்வலர்கள் மற்றும் பெண் அமைப்புக்கள் – இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்கிற கோரிக்கைகளையும் முன்வைத்து வந்தது.

இது தொடர்பில் புதிது வெளியிட்ட வீடியோ பதிவு