
அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக பதிவதற்கான விண்ணப்பங்களை, அரசியல் கட்சிகளிடமிருந்து தேர்தல் ஆணைக்குழு விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.
பிப்ரவரி 28 முதல் மார்ச் 28, 2025 பிற்பகல் 3.00 மணி வரை விண்ணப்பங்களை இதற்கான சமர்ப்பிக்க முடியும்.
பதிவுத் தபால் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். அல்லது கட்சியின் செயலாளர் நேரில் ஒப்படைக்க வேண்டும். உறையில் ‘அரசியல் கட்சிகளை அங்கீகரிப்பதற்கான விண்ணப்பம் – 2025’ என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டு, தேர்தல் ஆணைக்குழுத் தலைவருக்கு முகவரியிடப்பட்டு – ராஜகிரியவில் உள்ள தேர்தல் ஆணைக்குழுவின் காரியாலயத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும்.
விண்ணப்பத்துடன் கட்சியின் யாப்பு, குறைந்தது ஒரு பெண்ணை உள்ளடக்கிய நிர்வாகிகளின் பட்டியல், கடந்த நான்கு ஆண்டுகளாக கணக்காய்வு செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைகள், தற்போதைய கொள்கை அறிக்கை மற்றும் அதே காலகட்டத்தில் அரசியல் நடவடிக்கைக்கான சான்றுகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களின் சான்றளிக்கப்பட்ட நகல்களை சமர்ப்பிக்க வேண்டும்.
ஒக்டோபர் 4, 2024 திகதியிட்ட விசேட – இலக்கம் 2404/64 என்ற வர்த்தமானியில் இருந்து தங்களுக்கு விருப்பமான சின்னங்களை கட்சிகள் தமக்காக தேர்வுசெய்து குறிப்பிட வேண்டும். கட்சி அங்கீகார முடிவுகள் தொடர்பாக நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தின் பிரிவு 7 இன் கீழ் வெளியிடப்பட்ட தீர்மானங்கள் இறுதியானவை என்றும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
விண்ணப்பப் படிவங்களை www.elections.gov.lk இல் பதிவிறக்கம் செய்யலாம் அல்லது மாவட்டத் தேர்தல் அலுவலகங்களிலிருந்து பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு, விண்ணப்பதாரர்கள் 1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல் சட்டம் மற்றும் ஜனவரி 21, 2022 திகதியிட்ட வர்த்தமானி இலக்கம் 2263/23 ஐப் பார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.



