
ஈஸ்டர் தின தாக்குதல்களுக்குப் பின்னால் இருந்தார் எனக் கூறி, ஒரு பிரதான சூத்திரதாரியை (mastermind) உருவாக்குவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக பிவிதுரு ஹெல உறுமய தலைவர் உதய கம்மன்பில குற்றம் சாட்டியுள்ளார்.
இன்று (03) நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய கம்மன்பில, அரசாங்கம் ஆரம்பத்தில் உண்மையான குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதாக உறுதியளித்து ஆட்சிக்கு வந்ததாகக் கூறினார். இருப்பினும், நிர்வாகத்திலுள்ள சில நபர்கள் இதில் சம்பந்தப்பட்டிருப்பதால், பொதுமக்களை தவறாக வழிநடத்த ஒரு மாற்று கதை உருவாக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
“உண்மையிலேயே தாக்குதலுக்குப் பொறுப்பானவர்கள் இன்னும் நிர்வாகத்திற்குள் இருப்பதால், ஒரு புதிய தலைசிறந்த பிரதான சூத்திரதாரியை உருவாக்குவதற்கான விரிவான திட்டத்தில் – அரசாங்கம் இப்போது ஈடுபட்டுள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக முன்னாள் அரச புலனாய்வுத் துறையின் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் குறிவைக்கப்படுவதாகவும் அவர் மேலும் கூறினார். “ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நன்மை பயக்கும் வகையில் – அரசு புலனாய்வுத் துறை, ஈஸ்டர் தின குண்டுவெடிப்புகளை நடத்தியது என்ற தவறான கூற்றை நிறுவுவதே இதன் நோக்கம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி, முன்னாள் விமானப்படைத் தளபதி மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி ஆகியோர் அடங்கிய மூன்று பேர் கொண்ட ஜனாதிபதி விசாரணைக் குழுவை இதன்போது உதய கம்மன்பில மேற்கோள் காட்டினார். இலங்கையின் புலனாய்வு அமைப்புகளை தாக்குதல்களுடன் இணைக்கும் வகையில் இங்கிலாந்து சார்ந்த சேனல் 4 ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை அந்த குழு நிராகரித்ததாகவும் அவர் கூறினார். ஆயினும் அந்த குழுவின் அறிக்கையை அரசாங்கம் அறிக்கையை புறக்கணித்து – தவறான கதையை முன்வைப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
அரசாங்க சதித்திட்டத்தில் முக்கிய சாட்சியாகக் கூறப்படும் ஆசாத் மௌலானா, மோசடி மற்றும் அடையாள மோசடி உள்ளிட்ட பல குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் என்றும் கம்மன்பில குற்றம் சாட்டினார். அதே வேளையில், புலனாய்வு அதிகாரிகளுக்கு எதிராக வாக்குமூலம் பெறுவதற்காக ஆசாத் மௌலானா இலங்கைக்குத் திரும்புவதற்கு அரசாங்கம் உதவுவதாகவும் உதய கம்மன்பில தெரிவித்தார்.
தொடர்பான செய்தி: ஈஸ்டர் தாக்குதல்; சேனல் 4 ஆவணப்படத்தின் முக்கிய சாட்சி: யார் இந்த ஆசாத் மௌலானா?
இதையும் பாருங்கள்



