ஈஸ்டர் தாக்குதல்; சேனல் 4 ஆவணப்படத்தின் முக்கிய சாட்சி: யார் இந்த ஆசாத் மௌலானா?

🕔 September 11, 2023

லங்கை அரசியலில் கடுமையான அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது, ஈஸ்டர் தின தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக சேனல் 4 வெளியிட்ட ஆவணப்படம்.

கடந்த 2021ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தில் நடந்த தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில், பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும் சேனல் 4 ஊடகம், ஆவணப்படம் ஒன்றை கடந்த 5ஆம் தேதி வெளிட்டது.

குறித்த ஆவணப்படத்தில் சிலர் தமது அடையாளத்தை வெளிப்படுத்திக் கொண்டும், மறைத்தும் முக்கிய சாட்சிகளாக தகவல்களை வழங்கியிருந்தனர்.

அவ்வாறு சாட்சியம் வழங்கியவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர், ஹன்ஸீர் ஆசாத் மௌலானா.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தற்போதைய ராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன், இலங்கை புலனாய்வு பிரிவின் தலைவர் சுரேஷ் சாலே ஆகியோர் – ஈஸ்டர் தாக்குதலை பின்னணியில் இருந்து நடத்தினர் என, ஹன்ஸீர் ஆசாத் மௌலானா, சேனல் 4 ஆவணப்படத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.

பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடகப் பேச்சாளராக நீண்ட காலம் செயல்பட்ட ஹன்ஸீர் ஆசாத் மௌலானா, சேனல் 4 ஆவணப்படத்தில் வெளியிட்ட தகவல்கள், இலங்கை அரசியலிலும் அதற்கு வெளியிலும் கடுமையான வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிள்ளையான் எனப்படும் ராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டோர் உடனடியாக பதிலளிக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.

அதோடு, நாடாளுமன்றில் இது தொடர்பாக விவாதமொன்றை நடத்துவதற்கான தீர்மானத்தையும் ஹன்ஸீர் ஆசாத் மௌலானாவின் சாட்சியம் ஏற்படுத்தியிருக்கிறது.

இதேவேளையில், “சேனல் 4 அண்மையில் ஒளிபரப்பிய சர்ச்சைக்குரிய ஆவண நிகழ்ச்சியின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட தகவல்கள் மற்றும் பாரதூரமான குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு, ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதியரசர் தலைமையில் குழுவொன்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியமிக்கவுள்ளார்,” என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்திருக்கிறது.

இவ்வளவு பெரிய எதிர்வினைகளை ஏற்படுத்தும் அளவுக்கு ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக தகவல்களை வெளியிட்ட ஆசாத் மௌலானா யார்? இவரின் பின்னணி என்ன?

ஆசாத் மௌலானா

ஆசாத் மௌலானா ஈழப் போரளியின் மகனா?

இலங்கையின் அம்பாறை மாவட்டம் மருதமுனையைச் சேர்ந்தவர் ஆசாத் மௌலானா. இவரது நிஜப் பெயர் முகமது ஹன்ஸீர். 2004ஆம் ஆண்டு புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், பிள்ளையான் குழுவினருடன் இவர் இணைந்து இயங்கியபோது, ‘ஆசாத் மௌலானா’ என்கிற பெயரால் இவர் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.

இந்தப் பெயரை ஏன் இவர் தேர்வு செய்தார் எனத் தெரியவில்லை. ஆனால் ‘மௌலானா’ எனும் பெயரோடு ஹன்ஸீருக்கு குடும்பத் தொடர்பு ஒன்று உள்ளது. இவரது பாட்டியின் (தந்தையின் தாய்) சகோதரர் பெயர் மசூர் மௌலானா.

அவர் இலங்கை செனட் சபை உறுப்பினராகப் பதவி வகித்தார். இலங்கை அரசியலில் மிகவும் அறிப்பட்ட மசூர் மௌலானா 2015ஆம் ஆண்டு 84வது வயதில் காலமானார்.

ஆசாத் மௌலானா என்கிற ஹன்ஸீர் 1984ஆம் ஆண்டு அவரது பெற்றோருக்கு முதல் பிள்ளையாகப் பிறந்தார். க.பொ.த உயர்தரத்தில் (13ஆம் வகுப்பு) விஞ்ஞான பிரிவைக் கற்றவர்.

பின்னர் குண்டசாலையிலுள்ள இலங்கை விவசாயக் கல்லூரியில் சேர்ந்து படித்தார். ஆயினும் சில காரணங்களால் ஓராண்டு கழிந்த நிலையில் அந்தக் கல்லூரியிலிருந்து இடை விலகினார்.

அந்தக் காலப்பகுதில் தற்போதைய ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவினுடைய சிபாரிசின் பேரில், அரச மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனத் தலைவரின் பிரத்தியேக பணியாட்களில் ஒருவராக ஆசாத் மௌலானா நியமிக்கப்பட்டார்.

டக்ளஸ் தேவானந்தா அப்போது விவசாய அமைச்சராக பதவி வகித்தார். அவரின் கீழ்தான் மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனம் இருந்தது.

அதன் தலைவராக குணசேகரம் சங்கர் என்பவர் பணியாற்றினார். அவர் பிற்காலத்தில் ஈபிடிபியின் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தார்.

டக்ளஸ் தேவானந்தா மற்றும் குணசேகரம் சங்கர் ஆகியோருக்கு நண்பராக இருந்தவர் ஆசாத் மௌலானாவின் தந்தை. ஈபிடிபி இயக்கம் தொடங்கப்படுவதற்கு முன்னர், டக்ளஸ் மற்றும் சங்கர் போன்றோர் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிஆர்எல்எப்) எனும் இயக்கத்தில் இருந்தனர்.

அப்போது ஆசாத் மௌலானாவின் தந்தையும் அந்த இயக்கத்தில் ஒரு விடுதலைப் போராளியாக செயல்பட்டார்.

‘கமலன்’ எனும் மிஹ்ழார்

ஆசாத் மௌலானாவின் தந்தையின் பெயர் முகம்மட் மிஹ்ழார். அவர் ஆரம்பத்தில் ஜேவிபி (மக்கள் விடுதலை முன்னணி) இயக்கத்தில் சேர்ந்து செயற்பட்டார்.

பின்னர் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிஆர்எல்எப்) எனும் தமிழர் போராட்ட இயக்கத்தில் இணைந்து, அதில் முக்கிய பொறுப்பும் வகித்தார். ஈபிஆர்எல்எஃப் இயக்கத்தில் ஆசாத் மௌலானாவின் தந்தை ‘கமலன்’ எனும் பெயரால் அழைக்கப்பட்டார்.

இலங்கையில் 1987ஆம் ஆண்டு, இணைந்த வடகிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடைபெற்றபோது, ஆசாத் மௌலானாவின் தந்தை மிஹ்ழார், ஈபிஆர்எல்எப் சார்பாக அம்பாறை மாவட்டத்தில் ‘மலர்’ சின்னத்தில் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.

சென்னையில் உள்ள கோடம்பாக்கத்தில், 1990ஆம் ஆண்டு ஜுன் 19ஆம் தேதி, ஸக்கரியா தெருவிலுள்ள ஒரு கட்டடத்தில் வைத்து, அப்போதைய ஈபிஆர்எல்எப் தலைவர் பத்மநபாவும் அவரது இயக்கத் தோழர்களுமாக 13 பேரை விடுதலைப் புலிகள் சுட்டுக் கொன்றனர். அதில், ஆசாத் மௌலானாவின் தந்தை மிஹ்ழாரும் மரணித்தார்.

மிஹ்ழார் – ஆசாத் மௌலானாவின் தந்தை

இதையடுத்து அந்தத் தாக்குதலில் மரணித்த பத்மநபா உள்ளிட்டோரின் உடல்கள் ராஜாஜி மண்டபத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டன.

பின்னர், சென்னையிலுள்ள முஸ்லிம் மையவாடி ஒன்றில் மிஹ்ழாரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மிஹ்ழாரின் நல்லடக்கம் சென்னையில் நடைபெற்ற போது…

குழுந்தப் பருவத்தில் தந்தையை இழந்தவர்

ஆசாத் மௌலானா தந்தையை இழந்தபோது அவருக்கு 6 வயது. விடுதலைப் புலிகளால் அவரின் தந்தை கொல்லப்பட்டதால், ஆசாத் மௌலானா இயல்பிலேயே ‘புலிகள்’ மீது கடுமையான கோபம் கொண்டவராக இருந்தார் என அவரின் உறவினர் ஒருவர் கூறுகிறார்.

ஆசாத் மௌலானா 2005ஆம் ஆண்டு காலப்பகுதியில் பாணந்துறையிலுள்ள தனது மாமியின் (தந்தையின் சகோதரி) மகளை திருமணம் செய்தார். அதில் அவருக்கு இரண்டு பிள்ளைகள் பிறந்தனர்.

பின்னர் சாய்ந்தமருது பிரதேசத்தில் இன்னொரு பெண்ணையும் திருமணம் செய்தார். ஆனால், மிகக் குறுகிய காலத்திலேயே அந்தப் பெண்ணுடன் விவாகரத்தாகி விட்டது.

பிள்ளையான் தலைமையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு இயங்கத் தொடங்கிய பின்னர், அதன் பேச்சாளராக ஆசாத் மௌலானா நீண்ட காலம் செயல்பட்டார். அதேவேளை பிள்ளையானின் நிதிப் பொறுப்பாளராகவும் கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக பிள்ளையான் பதவி வகித்த காலத்தில் அவரின் பிரத்தியேக செயலாளராகவும் ஆசாத் மௌலானா பணியாற்றினார்.

இவ்வாறு பிள்ளையானுடன் நீண்டகாலம் நெருக்கமாக இருந்து வந்த ஆசாத் மௌலானா, 2022ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து வெளியேறியதாகக் கூறப்படுகிறது.

தற்போது அவர் சுவிட்சர்லாந்தில் அல்லது ஐரோப்பிய நாடொன்றில் உள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சேனல் 4 ஆவணப்படத்துக்கு முன்னர், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான முறைப்பாடு ஒன்றை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆசாத் மௌலானா சமர்ப்பித்துள்ளார் எனவும் தெரிய வந்துள்ளது.

பிள்ளையானுடன் ஆசாத் மௌலானா

(நன்றி: பிபிசி தமிழ்)

Comments