
சிறைச்சாலை பஸ்ஸிலிருந்து தப்பித்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்ட ‘கடாபி’ என்ற நபர், இலங்கையில் மேலும் பல குற்றங்களில் ஈடுபட்டமை கண்டறியப்பட்டுள்ளது.
2010 ஆம் ஆண்டு சிறைச்சாலை பஸ்ஸின் தரைப் பலகையை அகற்றி தப்பிச் சென்றதற்காக கடாபி எனப்படும் உபேகா சந்திரகுப்தா தேடப்பட்டு வந்தார்.
இந்த நிலையில், 15 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் பிலியந்தலையில் உள்ள மாம்பே பகுதியிலுள்ள ஒரு வீட்டில் மறைந்திருந்தபோது சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.
அவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சிறைச்சாலை பஸ்ஸில் இருந்து தப்பிச் சென்றதாக அந்த நபர் ஒப்புக்கொண்டார். அதே நேரத்தில் அவர் நாட்டில் பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடையவர் என்பதும் கண்டறியப்பட்டது.
2010 ஆம் ஆண்டு கெஸ்பேவவில் உள்ள பிராந்திய மேம்பாட்டு வங்கியைக் கொள்ளையடித்ததில் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர் இவர்தான் என்பது விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 2017 ஆம் ஆண்டு பாணந்துறை மேல் நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
அவர் தப்பிச் சென்ற பிறகு, வெளிநாட்டில் தஞ்சம் புகுந்து பல ஆண்டுகளுக்கு முன்பு இலங்கைக்குத் திரும்பினார். அதன் பிறகு அவர் பல பகுதிகளில் தலைமறைவாக இருந்தார் என்பதும் கண்டறியப்பட்டது.
மாம்பே பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய குறித்த நபர் – நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.



