தலைப்புச் செய்திகள்

அதிக சம்பளம் பெறும் 10 தொழில்களில் ஆசிரியர், அதிபர் சேவைகளையும் உள்ளடக்க நடவடிக்கை: தொழில் பிரதியமைச்சர்

ல்வித் துறையில் சம்பள ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்வதற்கும், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் உட்பட ஐந்து முக்கிய கல்வி சேவைகளை நாட்டின் அதிக ஊதியம் பெறும் 10 தொழில்களில் ஒன்றாக உயர்த்துவதற்கும் அரசாங்கம் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தொழில் பிரதியமைச்சர் மஹிந்த ஜெயசிங்க தெரிவித்தார்.

மஹரகம பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசிய போது, அவர் இதனைக் கூறினார். கல்வித் துறையில் சம்பளத்தை அதிகரிப்பதற்கும் நீண்டகாலமாக நிலவும் சம்பளப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் அரசாங்கம் எடுத்துள்ள உறுதிப்பாட்டை அவர் கோடிட்டுக் காட்டினார்.

“அடுத்த மாதம் தொடக்கம் வரவு – செலவுத் திட்டத்தை நாங்கள் தாக்கல் செய்வோம். அதில் அரச ஊழியர்களின் சம்பளத்தில் அதிகரிப்பு இருக்கும். அதைப் பற்றி எந்த சந்தேகமும் வேண்டாம்” என்றும் அவர் குறிப்பிப்பிட்டார். அரச துறையின் சம்பள சீர்திருத்தங்களுக்கு முன்னுரிமை அளிக்க அரசாங்கம் முயற்சிகளை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிப்பிட்டார்.

கல்வித் துறையில் சம்பள ஏற்றத்தாழ்வுகள் தொடர்ச்சியாக உள்ளமையினையும் அவர் ஒப்புக்கொண்டார். “ஆசிரியர்களுக்கான மூன்றில் இரண்டு பங்கு சம்பள ஏற்றத்தாழ்வு குறித்து பலர் கேட்கிறார்கள். இந்தப் பிரச்சினையைத் தீர்க்க தேவையான ஆரம்ப கலந்துரையாடல்கள் நாங்கள் ஏற்கனவே நடத்தி வருகிறோம்” என்றும் அவர் மேலும் கூறினார்.

கல்வியாளர்களுக்கான அரசாங்கத்தின் திட்டங்களை எடுத்துரைத்த பிரதியயைமச்சர் – ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி நிர்வாகிகள், ஆசிரிய கல்வியாளர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசகர்கள் ஆகிய ஐந்து சேவைகளை முதல் 10 சம்பள அளவுகளில் சேர்ப்பதற்கு பரிசீலித்து வருவதாகக் குறிப்பிட்டார்.

“சம்பள அளவுகளை நிவர்த்தி செய்வது மட்டுமல்லாமல், இந்த சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும் தற்போது கலந்துரையாடல்கள் நடந்து வருகின்றன. பொருத்தமான சம்பள சீர்திருத்தம் மூலம் – கல்வியின் தரத்தை மேம்படுத்துவதே எங்கள் குறிக்கோள்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.