
– பாறூக் ஷிஹான் –
கண்டி – கெலிஓயா பிரதேசத்தில் பாத்திமா ஹமிரா என்ற 18 வயது பாடசாலை மாணவியை கடத்தி 50 லட்சம் ரூபாய் கப்பம் கோரிய 31 வயதுடைய மொஹமட் நாசர் என்பவரை, பாடசாலை மாணவியுடன் அம்பாறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இன்று (13) காலை கண்டிக்கு புறப்படவிருந்த சொகுசு பஸ்ஸில் இருந்த போது, கடத்திச் சென்ற நபரையும், குறித்த மாணவியையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
நேற்றிரவு (12) அம்பாறை பகுதியில் உள்ள – தனியார் விடுதி ஒன்றில் இருவரும் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மாணவியிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை, தனது மாமாவின் (தாயின் தம்பி) மகளையே, சந்தேக நபர் கடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர் இது குறித்து பொலிஸாரிடம் தெரிவிக்கையில், இரண்டு வருடங்களுக்கும் மேலாக ஜப்பானில் தான் பணிபுரிந்ததாகவும், தனது மாமாவிடம் தன்னுடைய பணத்தை கொடுத்ததாகவும், ஆனால் பணத்தை மாமா – திருப்பித் தராததால்தான், அவரின் மகளைக் கடத்தியதாகவும் கூறியுள்ளார்.
கடத்தப்பட்ட பாடசாலை மாணவி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டார்.
நேற்று முன்தினம் தனியார் வகுப்புக்குச் சென்று திரும்பிய போது, வேன் ஒன்றில் குறித்த மாணவி பலாத்காரமாக கடத்திச் செல்லப்பட்டார். இது தொடர்பான சிசிரிவி வீடியோ ஊடகங்களில் வெளியாகியிருந்தன.






