
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் மற்றும் விடுதலைப் புலி குழுக்களிடமிருந்து மரண அச்சுறுத்தல் உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சட்டத்தரணிகள் சங்கத்தின் உப தலைவர் மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஊடகங்களிடம் பேசிய அவர்; “டிசம்பர் 23 முதல், மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட ராணுவ அதிகாரிகளை பொது பாதுகாப்பு அமைச்சு திரும்பப் பெற்று விட்டது’ என்றார்.
பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ்.டி. விக்ரமசிங்க – 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 10ஆம் திகதி ஜனாதிபதி பாதுகாப்புக் குழுவிடம் சமர்ப்பித்த அறிக்கையின் படி, முன்னாள் ஜனாதிபதிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளமையையும், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினால் ஆளில்லா விமானத்தை அடிப்படையாகக் கொண்ட குண்டுத் தாக்குதலுக்கான திட்டங்கள் உள்ளன எனும் உளவுத்துறை அறிக்கையினையும் மனோஜ் கமகே சுட்டிக்காட்டினார்.
விடுதலைப் புலிகள் மற்றும் பாதாள உலகக் குழுக்களிடமிருந்து முன்னாள் ஜனாதிபதியின் உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.
அனுபவம் வாய்ந்த மற்றும் ஆயுதம் ஏந்திய ராணுவ வீரர்களுக்குப் பதிலாக, ராஜபக்சேவின் பாதுகாப்புக்காக பொலிஸ் அதிகாரிகளை மட்டுமே நியமிக்கும் நடவடிக்கையை மனோஜ் கமகே விமர்சித்தார். மேலும்ட, மஹிந்த ராஜபக்ஷவுக்கு உள்ள அச்சுறுத்தல்களின் தீவிரத்தைக் கருத்தில் கொள்ளும் போது, இந்தப் பாதுகாப்பு போதுமானதாக இல்லை என்றும் தெரிவித்தார்.



