
காலநிலை சீர்கேடு காரணமாக அண்மையில் பயிர்கள் அழிவடைந்த நெற்செய்கையாளர்களுக்கு – ஒரு ஹெக்டேருக்கு 01 லட்சம் ரூபாய் வரையில் நஷ்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
சோளம், மிளகாய், உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் மற்றும் சோயா ஆகியவற்றை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கும், 2025 பயிர் காப்புறுதி ஒதுக்கீட்டின் கீழ் – இதேபோன்ற இழப்பீடு வழங்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
மோசமான காலநிலையால் அழிவடைந்த அல்லது சேதமடைந்த தோட்டங்கள் மற்றும் நீர்ப்பாசனத் திட்டங்கள் பற்றிய விவரத்தையும் அமைச்சர் வழங்கியுள்ளார்.
விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் தரவுகளின்படி (டிசம்பர் 2, 2024 வரை)
• நெல் வயல்கள்: 91,300 ஏக்கர் முற்றாக அழிவடைந்ள்ளதோடு, 86,225 ஏக்கர் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
• நீர்ப் பாசனத் திட்டங்கள்: 173 சிறு திட்டங்கள் முற்றிலும் அழிவடைந்துள்ளதோடு 1,148 பகுதி சேதமடைந்துள்ளது.
• காய்கறித் தோட்டங்கள்: நுவரெலியா மாவட்டத்தில் மட்டும் 750 ஏக்கருக்கு மேல் அழிவடைந்துள்ளது.
குறுகிய கால பயிர்களுக்கு விதை நெல் வழங்குவதற்கும், சேதமடைந்த வயல்களில் மீண்டும் பயிர் உற்பத்திக்கு 2 1/2 முதல் 03 மாத நெல் வகைகளை வழங்குவதற்கும் விவசாயத் திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.



