தலைப்புச் செய்திகள்

சியாம் படுகொலை: முன்னாள் டிஐஜி வாஸ் குணவர்த்தன உள்ளிட்ட 06 பேரின் மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியது

தொழிலதிபர் மொஹமட் சியாம் 2013 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன மற்றும் ஐந்து குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை, உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (20) அறிவித்தது.

முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன மற்றும் அவரின் மகன் ரவிந்து குணவர்தன, சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் மற்றும் மூன்று பொலிஸ் கொன்ஸ்டபிள்களை – இன்று (20) கொழும்பு மேல் நீதிமன்றில் சிறைச்சாலை அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். இதன்போது உச்ச நீதிமன்றம் இவர்களின் மரண தண்டனையை உறுதிப்படுத்தியுள்ளதாக – கொழும்பு மேல் நீதிமன்றம் தெரிவித்தது.

இந்த வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டை உச்ச நீதிமன்றம் நிராகரித்து, மரண தண்டனையை உறுதி செய்துள்ளதாக, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபாண்டிகே குற்றவாளிகளுக்கு கூறினார்.

கொழும்பு வர்த்தகர் மொஹமட் ஷியாம் என்பரை – முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவும் ஏனைய குற்றவாளிகளும் 2013 ஆம் ஆண்டு மே மாதம் கடத்திக் கொலை செய்தனர்.

50 ஆயிரம் அமெரிக்க டொலர்களை கொந்தராத்தாகப் பெற்று – இந்தக் கொலையை அவர்கள் மேற்கொண்டனர்.