தலைப்புச் செய்திகள்

முன்னாள் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, அவரின் மனைவிக்கு பிணை

சட்டவிரோதமான முறையில் மோட்டார் வாகனத்தை பொருத்தி உருவாக்கியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் அவரின் மனைவி – பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

லொஹான் ரத்வத்த மற்றும் அவரின் மனைவிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (05) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, நுகேகொட நீதவான் நீதிமன்றம் அவர்களுக்கு பிணை வழங்கியது.

மிரிஹான பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது – மிரிஹானவில் உள்ள லொஹான் ரத்வத்தவின் மனைவிக்கு சொந்தமான வீட்டில், இலக்கத்தகடு இல்லாத வாகனம் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து லொஹான் ரத்வத்தயும் அவரின் மனைவியும் கைது செய்யப்பட்டனர்.

குறித்த வாகனம் கண்டு பிடிக்கப்பட்டதை அடுத்தே, அந்த வீடு லொஹான் ரத்வத்தயின் மனைவிக்கு சொந்தமானது என்று பொலிஸார் கண்டறிந்தனர்.

இதனையடுத்து, ​​கண்டியில் தற்கொலை செய்து கொண்ட தனது ஒருங்கிணைப்புச் செயலாளர், தனக்குத் தெரிவிக்காமல் அந்த வாகனத்தை தனது மனைவியின் வீட்டுக்கு கொண்டு வந்ததாகவும், வாகனத்தின் உரிமையாளர் யார் என்பது தனக்குத் தெரியாது என்றும் லொஹான் ரத்வத்த கூறியிருந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக முதலில் லொஹான் ரத்வத்த கைது செய்யப்பட்டார். பின்னர் அவரின் மனைவியும் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவர்கள் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது, அவர்களை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

தொடர்பான செய்தி: முன்னாள் ராஜாங்க அமைச்சர் ரொஹான் ரத்வத்த கைது