அம்பாறை மாவட்டத்தில் பல பிரதேசங்களில் வெள்ளம்: நாட்டில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

🕔 November 25, 2024

– பாறுக் ஷிஹான்

ம்பாறை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடை மழை காரணமாக – தாழ்ந்த பிரதேசங்கள், வீதிகள் மற்றும் விடுகள் நீரில் மூழ்கிக் காணப்படுவதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, பொத்துவில், நிந்தவூர், இறக்காமம், கல்முனை, சம்மாந்துறை உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ளப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

தாழ்ந்த பகுதிகளில் உள்ள வீதிகள் நீரில் முழ்கிக் காணப்படுவதால் – மக்கள் பிரயாணம் செய்வதில் பல கஸ்டங்களை அனுபவித்து வருகின்றனர். நாட்டில் பல பகுதிகளில் பெய்துவரும் கடும் மழை காரணமாக 15,622 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால், பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல ராணுவம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவுகள் நடவடிக்கை எடுத்துள்ளன. இந்த நிலையில் பெரும்போகத்தில் பயிரிடப்பட்ட நெற்பயிர்களில் பெரும்பாலானவை வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

கடும் மழை காரணமாக அம்பாறை மாவட்டத்தில்  உள்ள அனைத்து நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. சில நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன. மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. காலநிலை மாற்றத்தால் மீனவர்களை குறிப்பிட்ட தினங்கள் வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வாய்க்கால்களை நேரகாலத்துடன் – நீர்ப்பாசனத் திணைக்களம் புனரமைக்காமையினால், விதைக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு அழிவு ஏற்பட்டு வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

வெள்ளநீர் புகுந்துள்ள இடங்களில் வசிக்கும் மக்கள் – அங்கிருந்து வெளியேறி, பாதுகாப்பாக தங்கள் உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர்.

இவ்வாறான நிலையில் இன்றைய தினம் க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்