டொக்டர் அர்ச்சுனா எம்.பியின் நடத்தை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும்: சபாநாயகர் தெரிவிப்பு
பத்தாவது நாடாளுமன்றத்தின் ஆரம்ப அமர்வின் போது – நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் அர்ச்சுனா ராமநாதனின் சர்ச்சைக்குரிய நடத்தையினை அடுத்து அவருடன் கலந்துரையாடல் நடத்துவதற்கு – சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல 10வது திட்டமிட்டுள்ளார்.
புதிய நாடாளுமன்ற அமர்வு கடந்த 21ஆம் திகதியன்று நடைபெற்ற போது, டொக்டர் அர்ச்சுனா – எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் அமர்ந்தார். இதனையடுத்து வேறொரு ஆசனத்தில் அமருமாறு நாடாளுமன்ற ஊழியர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் அதனை ஏற்க டொக்டர் அர்ச்சுனா மறுத்து விட்டார். மட்டுமன்றி, இந்த சம்பவத்தை அவரின் பேஸ்புக் பக்தத்திலும் நேரலையாக வெளியிட்டார். இதனையடுத்து, இந்த விடயம் சர்ச்சைக்குள்ளானது.
இந்த நிலையியில், நேற்று (24) கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சபாநாயகர், சம்பவத்தை கண்டித்ததோடு – தற்போதைய அரசியல் சூழலில் ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தினார்.
“அவரின் தனிப்பட்ட நோக்கங்களை நாங்கள் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை, ஆனால் அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் அபிலாஷைகள் தெளிவாக உள்ளன. குறிப்பாக அனைத்து பிரதேசங்களிலுமுள்ள மக்கள் – நாட்டிற்காக ஒற்றுமையையும் முன்னேற்றத்தையும் வேண்டி நிற்கும் நிலையில், இதுபோன்ற நடத்தைகளை பொதுமக்கள் மன்னிக்க மாட்டார்கள்”என்றும் சபாநாயகர் கூறினார்.
இந்த விவகாரம் உணர்வுபூர்வமாக கவனிக்கப்படும் என்று கூறிய சபாநாயகர், “நாங்கள் அவரின் நடவடிக்கைகள் மற்றும் சமூக ஊடக அறிக்கைகளை மதிப்பாய்வு செய்வோம் – கலந்துரையாடலில் ஈடுபடுவோம். அதற்கேற்ப தேவையான நடவடிக்கை எடுப்போம்” என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்பான செய்தி: நாடாளுமன்ற முதல்நாள் அமர்விலேயே ‘வேலையைக் காட்டிய’ டொக்டர் அர்ச்சுனா: ஊழியர் கெஞ்சிக் கேட்டும் முடியவில்லை