தேர்தல் திகதியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு

🕔 November 4, 2024

நாடாளுமன்றத் தேர்தலை நொவம்பர் 14ஆம் திகதி நடத்துவது என்ற தேர்தல் ஆணைக்குழுவின் முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உச்ச நீதிமன்றம் இன்று (04) தள்ளுபடி செய்தது.

நொவம்பர் 14 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு எடுத்த தீர்மானம் – அரசியலமைப்பை மீறுவதாக உத்தரவிடுமாறு கோரி, இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஒக்டோபர் மாதம், ‘அபி ஸ்ரீலங்கா’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரியந்த ஹேரத், நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள – அவசியமான நடைமுறைகள் மீறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு, அடிப்படை உரிமைகள் மனுவை தாக்கல் செய்தார்.

அதிகாரிகள் முறையாக வேட்புமனுக்களை கோரவில்லை என்றும், சட்ட விதிகளின்படி தேர்தல் திகதியை நிர்ணயிக்கவில்லை என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இருந்தபோதிலும் தேர்தல் திகதி அரசியலமைப்புக்கு முரணானது என, சமூக ஊடகங்களில் கூறப்பட்ட கூற்றுக்களை தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்நாயக்க முன்னர் நிராகரித்திருந்தார்.

“ஒக்டோபர் 11 ஆம் திகதியுடன் வேட்புமனுத் தாக்கல் முடிவடைகிறது. அந்த திகதியிலிருந்து, வேட்புமனு தாக்கல் செய்யும் நாள் உட்பட, ஐந்து வார இடைவெளி இருக்க வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. எனவே இந்த திகதி சரியானது” என்று தேர்தல் திகதி குறித்த குற்றச்சாட்டுகளுக்கு சமன் ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்