தபால்மூல வாக்களிப்பில் வேட்பாளர் பட்டியலை உறையில் வைத்து விட்டு வந்த ஆசிரியை: பின்னர் நடந்தது என்ன?
நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பின் போது, வாக்களிப்பு நிலையத்திலிருந்து வாக்குச் சீட்டை எடுத்துச் சென்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கண்டியைச் சேர்ந்த 53 வயதுடைய பாடசாலை ஆசிரியை பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கண்டி – வாரியபொல ஸ்ரீ சுமங்கலா கல்லூரியில் உள்ள வாக்களிப்பு நிலையத்தில், குறித்த வாக்குச் சீட்டுக்குப் பதிலாக, தபால் மூல வாக்கு உறையில் – வேட்பாளர் பட்டியலை பாடசாலை ஆசிரியை தவறுதலாக வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாத்தளையைச் சேர்ந்த ஆசிரியர், பின்னர் வீடு திரும்பியபோது குறியிடப்பட்ட வாக்குச் சீட்டு தன்னிடமுள்ளதை அறிந்தவுடன், உடனடியாக இது தொடர்பாக தனது பாடசாலை அதிபருக்கு அறிவித்து, குறித்த வாக்குச் சீட்டை அவரிடம் கையளித்துள்ளார்.
இது தொடர்பாக தேர்தல் அதிகாரிகளுக்கு அதிபர் தகவல் வழங்கியதையடுத்து, வாக்குச்சாவடிக்கு வெளியே வாக்குச் சீட்டை எடுத்துச் செல்வது தேர்தல் சட்டப்படி குற்றமாகும் என்பதால் ஆசிரியை கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து தனது தவறை ஒப்புக்கொண்டு நீதிமன்றில் ஆஜராக ஆசிரியை சம்மதித்ததையடுத்து, கண்டி பொலிஸார் குறித்த பெண் ஆசிரியை பொலிஸ் பிணையில் விடுவித்தனர்.