இலங்கையின் வெளிநாட்டு தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் 16 பேரை மீள அழைக்க தீர்மானம்

🕔 November 1, 2024

லங்கையின் வெளிநாட்டு தூதரகங்களின் தூதுவர்களாகவும் உயர்ஸ்தானிகர்களாகவும் அரசியல் ரீதியாக நியமிக்கப்பட்டுள்ள 16 பேரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மீள அழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இருப்பினும், திரும்ப அழைக்கப்படவுள்ளோரின் பெயர் பட்டியல் உடனடியாக கிடைக்கவில்லை என்றும், இவர்களுக்கு ஏற்கனவே இது தொடர்பில் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

டிசம்பர் 01ஆம் திகதி முதல் – இவர்கள் நாடு திரும்பியதும், அந்தந்த நாடுகளில் அவர்களின் செயல்பாடுகளை மதிப்பாய்வு செய்து அவர்களில் யாரையாவது மீண்டும் நியமிக்கலாமா வேண்டாமா என்பதை அரசாங்கம் முடிவு செய்யும் என்று, வெளிவிவகார வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.

இலங்கையின் வெளிநாட்டு சேவையில், அரசியல் நியமனம் பெற்றவர்கள் லண்டன், வாஷிங்டன், இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அபுதாபி போன்ற சில முக்கிய தலைநகரங்களில் கூட பணியாற்றுகின்றனர். அவர்களில் சிலர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் காலத்திலும் ஏனையவர்கள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் காலத்திலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவை தவிர, இலங்கையின் வெளிநாட்டுப் பணிகளில் கனிஷ்ட தரவரிசையில் பணியாற்றும் ஏராளமான அரசியல் நியமனதாரர்களும் உள்ளனர். அவர்களில் சிலர் அரசியல்வாதிகளின் உறவினர்களாவர்.

அரசியல் நியமனம் பெற்றவர்களைத் தவிர, ஓய்வுபெற்ற வெளிநாட்டுச் சேவை அதிகாரிகளும் தற்போது வெவ்வேறு வெளிநாட்டுத் தலைநகரங்களில் பணியாற்றுகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்