
– பாறுக் ஷிஹான் –
“நீங்கள் என்னை தெரிவு செய்து நாடாளுமன்றம் அனுப்புவதன் மூலமாக இந்த பிராந்திய அரச கட்டமைப்பு நிச்சயமாக மாற்றத்தை நோக்கி நகரும் என்று நம்புகிறேன்” என, நாடாளுமன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளரும், கட்சியின் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளருமான றிஸ்லி முஸ்தபா தெரிவித்தார்.
“எனது தந்தை முன்னாள் பிரதி அமைச்சர் மர்ஹூம் மயோன் முஸ்தபா அவர்களின் பல கனவு செயற்திட்டங்கள் என் கைவசம் உள்ளன. அவற்றை இன்ஷா அல்லாஹ் நான் முன்னெடுப்பேன்” எனவும் அவர் கூறினார்.
றிஸ்லி முஸ்தபாவை ஆதரித்து நிந்தவூரில் நடைபெற்ற இளைஞர் ஒன்று கூடல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.
Rizley Musthaffa Education Aid – Social Organization மூலமாக மேற்கொள்ளப்பட்ட திட்டங்களை அமுல்படுத்திய இளைஞர்களும், றிஸ்லி முஸ்தபாவின் அரசியல் செயற்பாட்டாளர்களும் இதன்போது கொளவிக்கப்பட்டனர்.
இங்கு தொடர்ந்து பேசிய றிஸ்லி முஸ்தபா;
“எமது அம்பாறை மாவட்டத்திலுள்ளஅரச ஊழியர்கள் இந்த முறை எனக்கு ஒரு சந்தர்ப்பத்தை தருவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. நீங்கள் எதிர்பார்க்கும் மாற்றம் என்னில் இருந்து ஆரம்பிக்கட்டும். அம்பாறை மாவட்டத்திலுள்ள சகல அரச ஊழியர்களும் பொருளாதார நெருக்கடி காரணமாக பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருவதை நான் அறிவேன். அரச ஊழியர்கள் எமது நாட்டின், சமூகத்தின் முதுகெலும்பாக உள்ளனர்.
நீங்கள் என்னை தெரிவு செய்து நாடாளுமன்றம் அனுப்புவதன் மூலமாக, இந்த பிராந்திய அரச கட்டமைப்பு நிச்சயமாக மாற்றத்தை நோக்கி நகரும் என்று நம்புகிறேன். எனது தந்தை முன்னாள் பிரதி அமைச்சர் மர்ஹூம் மயோன் முஸ்தபா அவர்களின் பல கனவுச் செயற்திட்டங்கள் என் கைவசம் உள்ளன. அவற்றை இன்ஷா அல்லாஹ் நிச்சயமாக முன்னெடுப்பேன்.
எனது சொந்த நிதி மூலமாக – முடியுமான அளவு எமது பிராந்திய பாடசாலைகளுக்கும், மாணவர்களுக்கும் உதவி உள்ளேன். அதை இடைவிடாது முன்கொண்டு செல்லவும், எமது பிராந்தியத்தில் கை நழுவிப்போன அரச காரியாலயங்களை மீண்டும் கொண்டு வரவும் என்னால் முடியும் என்று நம்புகிறேன்” என்றார்.




