
முபாறக் மௌலவி உருவாக்கிய ‘ஜனநாயக ஐக்கிய காங்கிரஸ்’ கட்சியின் தலைவராக ரஞ்சன் ராமநாயக்க நியமிக்கப்பட்டுள்ளமையை, மௌலவி முபாறக் அப்துல் மஜீத் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஆரம்பத்தில் ‘உலமா கட்சி’ எனும் பெயரில் முபாறக் மௌலவி உருவாக்கி, பின்னர் பெயர் மாற்றம் பெற்ற – ஜனநாயக ஐக்கிய காங்கிரஸ் கட்சி, லைக்கா மொபைல் நிறுவனத்துக்கு கைமாற்றப்பட்டுள்ளதாக – ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இருந்தபோதும், ‘லைக்கா’ நிறுவனத்துக்கும் ஜனநாயக ஐக்கிய காங்கிரஸ் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என – அந்தக் கட்சியின் தவிசாளரும் ஸ்தாபக தலைவருமான முபாறக் மௌலவி வெளியிட்டுள்ள அறிக்கையொன்றின் ஊடாக தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில்;
“எமது கட்சியை லைக்கா நிறுவனம் வாங்கியுள்ளது என பலரும் குற்றம் சாட்டுகிறார்கள். எமது கட்சிக்கும் லைக்காவுக்கும் சம்பந்தம் இல்லை. எமது கட்சியின் நிர்வாகத்தில் லைக்காவின் உரிமையாளர் அங்கத்தவராக இல்லை.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க எமது கட்சியின் நிர்வாக சபையின் ஏகோபித்த அனுமதியுடன் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இது தேர்தல் காலம் என்பதால் அவரின் நியமனம் பற்றி தேர்தல் திணைக்களம் தேர்தல் முடிவுற்ற பின் அறிவிக்கும்.
ரஞ்சன் ராமநாயக்க – லஞ்சம், களவு இல்லாத அரசியல்வாதி என்பதை முழு நாடும் அறியும்.
எமது கட்சியின் முதலாவது நாடாளுமன்ற தேர்தலிலேயே ஒன்பது மாவட்டங்களில் பலமான வேட்பாளர்களை நியமித்திருப்பதாலும், அவர்களில் பலர் வெற்றியை நோக்கி செல்வதாலும் ஏற்பட்ட எரிச்சல் காரணமாக, எமது கட்சி பற்றி பொய்களை பரப்புகிறார்கள்” என, முபாறக் மௌலவி தெரிவித்துள்ளார்.
தற்போது இந்தக் கட்சியின் பெயர் ‘ஐக்கிய ஜனநாயகக் குரல்’ என மாற்றப் பட்டுள்ளதோடு, ஒலிவாங்கி – அதன் சின்னமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



