தலைப்புச் செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல்: ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை காணாமல் போயுள்ளமை தொடர்பில் கவலை வெளியீடு

ஈஸ்டர் தின தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை காணாமல் போயுள்ளமை தொடர்பில், கொழும்பு மறை மாவட்ட தொடர்புப் பணிப்பாளர் அருட் தந்தை சிறில் காமினி பெனாண்டோ கவலை வெளியிட்டுள்ளார்.

பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தல் – செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், இந்த அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு மாற்றப்படுவதற்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்டதாகவும், ஆனால் அது காணாமல் போயுள்ளதாகவும் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கத்தின் முறையான விசாரணைகள் – கைதுகளுக்கு வழிவகுக்கலாம் என்று கூறிய சிறில் காமினி, பல அரசியல்வாதிகளை சிக்கவைக்கக்கூடிய முக்கியமான ஆதாரங்களை இந்த அறிக்கை கொண்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

மேலும் தாக்குதலின் தலைவரான சஹ்ரானுடன் தொடர்பு கொண்டிருந்த ‘அபுஹிந்த்’ என்பவரை – சம்பவத்தின் முக்கிய நபராக அவர் அடையாளம் காட்டினார்.

இந்த நிலையில் பொது பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள – ரவி செனவிரட்னவிடம் தாக்குதல்கள் தொடர்பான பொருத்தமான தகவல்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ரணில் விக்கிரமசிங்கவின் நிர்வாகத்தின் கீழ் – தாக்குதல்கள் மற்றும் அது தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக இரண்டு விசேட குழுக்கள் அமைக்கப்பட்டன. ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஐ. இமாம் தலைமையிலான முதலாவது குழு, ஜூன் 25, 2024 அன்று தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது.

ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.என்.ஜே. அல்விஸ் தலைமையிலான இரண்டாவது குழு, உளவுத்துறை நிறுவனங்களின் தோல்விகள் மீது கவனம் செலுத்தி, அந்தக் குழு கண்டறிந்த விடயங்களை செப்டம்பர் 14, 2024 அன்று அறிக்கையாக வழங்கியது,