தலைப்புச் செய்திகள்

வாகன விவகாரம்; முன்னாள் எம்.பியின் பெயரை பிழையாக குறிப்பிடப்பட்டமை தொடர்பில், ஜனாதிபதி செயலகம் மன்னிப்புக் கோரியது

நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தையடுத்து அரச வாகனங்களை திருப்பி அனுப்பிய முன்னாள் அரச அதிகாரிகள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியலை ஜனாதிபதி அலுவலகம் திருத்தியுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயசாந்த குணசேகர – டொயோட்டா ஹைலக்ஸ் (Toyota Hilux) வாகனத்தை ஜனாதிபதி செயலகத்துக்கு திருப்பி அனுப்பியதாக, ஜனாதிபதி செயலகம் வெளியிட்ட பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் – உதயசாந்த குணசேகர, அவ்வாறு தான் எந்த வாகனத்தையும் பெற்றுக் கொள்ளவில்லை என்றும், ஜனாதிபதி செயலகம் வெளியிட்ட அந்தத் தகவல் பிழையானது எனவும் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டிருந்ததோடு, 2020ஆம் ஆண்டில் தான் அரசியலில் இருந்து விலகியிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, ஜனாதிபதி செயலகம் மேற்படி பட்டியலை திருத்தி வெளியிட்டுள்ளதோடு, உதயகாந்த குணதிலக்க எனும் பெயரை – உதயசாந்த குணசேகர என குறிப்பிட்டதாக கூறியுள்ளது.

இந்த தவறினால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதயசாந்த குணசேகரவுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு மன்னிப்பு கோரியுள்ள ஜனாதிபதி அலுவலகம், வாகனத்தை உதயகாந்த குணதிலக்க பயன்படுத்தியதாகவும் திருப்பி அனுப்பியதாகவும் தெளிவுபடுத்தியுள்ளது.

2020ஆம் ஆண்டிற்குப் பின்னர் தான் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கவில்லை என்றும், அரச அதிகாரியாக செயற்படவில்லை எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயசாந்த குணசேகர சமூக ஊடகங்களில் தெளிவுபடுத்தியதை அடுத்து இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னைய அரசாங்கத்தில் ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான வாகனங்களைப் பெற்றுப் பயன்படுத்தியவர், ஆட்சி மாற்றத்தை அடுத் 107 வாகனங்களை திருப்பியனுப்பியதாக ஜனாதிபதி செயலகம் குறிப்பிட்டிருந்தது. அவர்களில் 38 பேர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.