தலைப்புச் செய்திகள்

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர், ஊடங்களுக்கு எச்சரிக்கை

தேர்தல் சட்டங்களை பின்பற்றாத ஊடக நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க; தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர்களை மாத்திரம் விளம்பரப்படுத்தும் சில ஊடகங்களுக்கு எதிராக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பிரதான ஊடகங்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களுக்கு – வேட்பாளர்களின் பிரசாரம் தொடர்பான அறிக்கைகளை அரசாங்க தகவல் திணைக்களம் அனுப்பி வருவதாக ரத்நாயக்க கூறியுள்ளார்.

சில ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரங்கள் மற்ற வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நேரத்துக்கு சமமாக இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“இது தொடர்பில் சம்பந்தப்பட்ட ஊடக நிறுவனங்களுக்கு நாங்கள் ஆலோசனை வழங்கியுள்ளோம். அவர்கள் எங்கள் ஆலோசனையை கடைபிடிக்கத் தவறினால், ஒரு வேட்பாளரை ஊக்குவித்துக்கொண்டே இருந்தால், தேர்தல் ஆணைக்குழுவுக்குள்ள அதிகாரத்தின் கீழ் – நிலைமையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

அவ்வாறு பக்கச்சார்பாக செயற்படும் ஊடக நிறுவனங்களுக்கும் தேர்தல் ஆணைக்குழுவுக்கும் இடையிலான தொடர்பை இடைநிறுத்துதல், ஊடக அறிக்கைகளை வெளியிடாமை, ஊடகவியலாளர் சந்திப்புக்கான அழைப்பிதழ்களை வழங்காமை மற்றும் தேர்தல் முடிவுகளை வெளியிடுவதை இடைநிறுத்துதல் ஆகிய நடவடிக்கைகள் பெரும்பாலும் மேற்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் விவரித்தார்.

2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலுக்காக – தேர்தல்ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை ஊடகங்கள் கடைப்பிடிக்குமாறும் ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார்.