வாகனம் ஓட்டிய வயது குறைந்த மகன், அனுமதித்த சட்டத்தரணி தந்தை ஆகியோருக்கு தண்டம்: வீடியோவினால் சிக்கினர்
பதினைந்து வயதுடைய தனது மகனை – தெற்கு அதிவேக வீதியில் கார் ஓட்ட அனுமதித்த சட்டத்தரணி மற்றும் காரை ஓட்டிய அவரின் மகனுக்கு 55,000 ரூபாயை தண்டமாக விதித்து பாணந்துறை பிரதான நீதவான் சம்பிகா ராஜபக்ஷ தீர்ப்பளித்தார்.
புத்தளத்தில் வசிக்கும் 42 வயதுடைய சட்டத்தரணி மற்றும் அவரின் மகனுக்கு இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், எதிர்காலத்தில் இவ்வாறான செயல்களில் ஈடுபட வேண்டாம் எனவும் நீதவான் கடுமையாக எச்சரித்துள்ளார்.
சட்டத்தரணி தனது குடும்ப உறுப்பினர்களுடன் அண்மையில் தங்காலை பிரதேசத்திலுள்ள உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றிருந்த நிலையில், அவர் தனது 15 வயது மகனுக்கு மத்தலயில் இருந்து கட்டுநாயக்க நோக்கி – காரை செலுத்த அனுமதித்துள்ளார். இந்த சம்பவத்தை மற்றொரு வாகன சாரதி வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்திய தெற்கு அதிவேக வீதியில் கடமையாற்றிய கலனிகம போக்குவரத்து பொலிஸார், காரின் பதிவு இலக்கத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் – காரின் உரிமையாளர் புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் கண்டனர்.
இதனையடுத்து சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத – தனது வயது குறைந்த மகனை கார் ஓட்ட அனுமதித்த குற்றத்திற்காக – காரின் பதிவு உரிமையாளரான வழக்கறிஞரை நீதிமன்றத்தில் பொலிஸார் ஆஜர்படுத்தினர்.
இதன்போது மகனை வாகம் செலுத்த அனுமதித்தமைக்காக சட்டத்தரணிக்கு 25,000 ரூபாயும், சீட் பெல்ட் அணியாது வாகனம் செலுத்திய மகனுக்கு 30,000 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டது.