பாகிஸ்தானிய யாத்திரீகர்கள் பயணித்த பஸ் ஈரானில் விபத்து: 28 பேர் மரணம்
பாகிஸ்தானிய யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பஸ் – நேற்று செவ்வாய்கிழமை இரவு (20) ஈரானில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 28 பயணிகள் உயிரிழந்துள்ளதாக ஈரானிய அரச ஊடகம் தெரிவித்துள்ளது.
மத்திய ஈரானிய மாகாணமான ‘யசிட்’ இல் செவ்வாய்கிழமை இரவு இந்த விபத்து நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது 23 பயணிகள் காயமடைந்துள்ளனர். அவர்களில் ஏழு பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர் என்று – அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஷியா நாட்காட்டி அடிப்படையிலான மிகப்பெரிய நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக, பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தில் இருந்து ஈராக்கின் கர்பலா நகரத்துக்கு மேற்படி யாத்திரீகள்கள் பயணம் செய்த போது, இந்த விபத்து நடந்துள்ளது.
விபத்தின் போது பஸ்ஸில் சுமார் 53 பேர் இருந்ததாக நம்பப்படுகிறது.
விபத்தில் இறந்தவர்களில் 11 பெண்களும் 17 ஆண்களும் உள்ளடங்குவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ஈரானில் உள்ள சோதனைச் சாவடியொன்றுக்கு முன்னால் பஸ் தீப்பிடித்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
“வாகன ஓட்டுநரின் கட்டுப்பாட்டின்மை, சாலையின் அறிமுகமின்மை, அதிக வேகம் மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகள் போன்ற காரணங்களால்” குறித்த பஸ், வீதியை விட்டு விலகிச் சென்றதாக கூறப்படுகிறது.