
அரச துறை ஊழியர்களின் சம்பளத்தை 25,000 ரூபாவால் 2025 ஆம் ஆண்டு முதல் அதிகரிப்பதற்கு, அமைச்சரவை அண்மையில் எடுத்த தீர்மானம், ஜனாதிபதித் தேர்தலில் அரசாங்க ஊழியர்களின் சுதந்திர வாக்களிப்பில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று, சுயாதீன கண்காணிப்பாளர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் முறையிட்டுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை (13) கூடிய அமைச்சரவை, அரசாங்க ஊழியர்களுக்கு வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவாக 25,000 ரூபாவை வழங்குவதுடன், 2025ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தில் இருந்து அவர்களின் சம்பளத்தில் 24% அதிகரிப்பையும் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.
சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை(பஃப்ரல்) நேற்று (16) வெளியிட்ட அறிக்கையில்; அரச அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசாங்கம் கடந்த சில மாதங்களில் ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து பல்வேறு தீர்மானங்களை எடுத்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.
தேர்தலுக்கு முன்னதாக, குறிப்பாக தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கை, அவர்களின் சுதந்திர வாக்களிப்பை தெளிவாக பாதிக்கும் என பஃப்ரல் சுட்டிக்காட்டியுள்ளது.
தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே தொழிற்சங்கங்கள் 10,000 ரூபா சம்பள உயர்வைக் கோரியபோது, அதற்குப் போதிய நிதி இல்லை எனக் கூறி அரசாங்கம் அதனை நிராகரித்தது.
மேலும், அரச துறையின் அளவைக் குறைக்க வேண்டும் என்று அரசாங்கம் அவ்வப்போது தெரிவித்து வந்த நிலையில், திடீரென 25,000 ரூபாய் சம்பளத்தை உயர்த்த முடிவெடுத்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் பஃப்ரல் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இது பாரிய சட்ட மீறல் என்பதால் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கவனத்துக்கு இந்த விடயத்தைக் கொண்டு வந்துள்ளதாக பஃப்ரலின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
“அரசு ஊழியர்களின் சுதந்திர வாக்களிப்பில் செல்வாக்கு செலுத்துவது, தேர்தல் சட்டத்தை கடுமையாக மீறுவதாகும், மேலும் இந்த விடயத்தில் தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றும் அவர் கூறியுள்ளார்.
2025 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் அடிப்படையில், அரச சேவையின் அனைத்துத் துறைகளினதும் சம்பளத்தை திருத்துவதற்கான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு – விசேட குழுவொன்றை நியமிக்க 2024 மே 27 ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தார்.



