
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், அந்தக் கட்சியின் பிரதித் தலைவர்களில் ஒருவருமான செய்யட் அலிசாஹிர் மௌலானா, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார் என, மு.காங்கிரஸ் செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் இன்று (17) தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. இந்த நிலையில், கட்சியின் முடிவுக்கு மாறாக – ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க அலிசாஹிர் மௌலானா முன்வந்தமையினை அடுத்து, அவர் கட்சிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக நிஸாம் காரியப்பர் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியிலிருந்து அலிசாஹிர் மௌலானா இடைநிறுத்தப்பட்டமையை அறிவிக்கும் கடிதம் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு ஏதாவது விளக்களிப்பதாயின் – ஒரு வாரத்துக்குள் அதனை அறிவிக்குமாறு தெரியப்படுத்தியுள்ளதாகவும் நிஸாம் காரியப்பர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய அறிவுறுத்தலுக்கு இணங்கவே, அலிசாஹிர் மௌலானாவை இடைநிறுத்தி கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் செயலாளர் நிசாம் காரியப்பர் மேலும் கூறியுள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸிலிருந்து அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசீர் அஹமட் நீக்கப்பட்டதை நீதிமன்றம் உறுதிப்படுத்தியதை அடுத்து – ஏற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்துக்கு, அலிசாஹிர் மௌலானா கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில்தான், அலிசாஹிர் மௌலானாவும் தற்போது முஸ்லிம் காங்கிரஸிலிருந்து இடைநித்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்பான செய்தி: மு.கா எம்.பி அலிசாஹிர் மௌலானா ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிக்கத் தீர்மானம்



