தலைப்புச் செய்திகள்

ஹரின், மனுஷ கட்சியிலிருந்து நீக்கப்பட்டமை சட்டபூர்வமானது; உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது: எம்.பி பதவிகளை இழக்கின்றனர்

அமைச்சர்களான ஹரின் பெனாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியிலிருந்து நீக்கப்பட்டமை, சட்டபூர்வமானது என உறுதி செய்து – உச்ச நீதிமன்றம் இன்று (09) தீர்ப்பளித்துள்ளது.

இதனால் அவர்கள் – நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஹரின் பெனாண்டோ மற்றும் மனுஷ நாணயக்காரவை ஆகியோரை கட்சியிலிருந்து நீக்கும் தீர்மானத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு 2023ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் திகதி எடுத்திருந்தது.

மேற்படி இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர் பதவிகளை ஏற்றுக்கொண்டதை அடுத்து, இவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து இடைநிறுத்தப்பட்டனர்.

ஹரின் பெனாண்டோ சுற்றுலா, காணி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும், மனுஷ நாணயக்கார தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராகவும் பணியாற்றினர்.

தாங்கள் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து, மேற்படி இருவரும் உச்ச நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தனர்.

ஆயினும், இவர்கள் இருவரும் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து நீக்கப்பட்டமை சட்டபூர்வமானது என, உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.