
– அஹமட் –
அட்டாளைச்சேனை ஜும்ஆ பெரிய பள்ளிவாசலுக்குச் சொந்தமான சுமார் 13 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் ‘காணாமலாக்கப்பட்ட’ நிலையில், அவற்றினை அடையாளம் கண்டு, எல்லைப்படுத்துவதற்கான களவிஜயமொன்றை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தாங்கள் ஏற்பாடு செய்துள்ளதாக, பள்ளிவாசல் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.எல். ஹனீஸ் தெரிவித்தார்.
பெரிய பள்ளிவாசலுக்குச் சொந்தமான 08 இடங்களில் உள்ள 13 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் இவ்வாறு காணாமலாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவற்றில் பெரிய பள்ளிவாசலுக்குச் சொந்தமான – இப்றாகிம் வெளிப்பள்ளம் பகுதி தொடர்பில், அக்கரைப்பற்று நீதிமன்றில் பள்ளிவாசலின் முன்னைய நிர்வாகம் வழக்குத் தொடர்ந்துள்ளது.
இந்த நிலையிலேயே, காணாமலாக்கப்பட்ட காணிகள் தொடர்பில் அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலின் ‘காணிகள் மற்றும் சொத்துக்களை கண்காணிக்கும் குழு’வினர் ஞாயிற்றுக்கிழமை காலை கள விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.
குறித்த குழுவை அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் நியமித்துள்ளது.
இந்தக் குழுவில் அட்டாளைச்சேனையிலுள்ள நீதிபதிகள், சட்டத்தரணிகள், நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள், துறைசார் அதிகாரிகள் மற்றும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளார்கள்.
இம்மாதம் 03ஆம் திகதி நடைபெற்ற – அட்டாளைச்சேனை ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் காணிகள் மற்றும் சொத்துக்களை கண்காணிக்கும் குழுக் கூட்டம் மற்றும் நேற்று 07ஆம் திகதி நடைபெற்ற மரைக்காயர் சபை மற்றும் பள்ளிவாசல் நிர்வாக சபைக் கூட்டம் ஆகியவற்றில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில், காணாமலாக்கப்பட்ட காணிகளை அடையாளம் காண்பதற்கான மேற்படி கள விஜயம் இடம்பெறவுள்ளது.
அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலின் காணிகள் மற்றும் சொத்துக்களை கண்காணிக்கும் குழுவொன்று 2017ஆம் ஆண்டு அமைக்கப்பட்டதாகவும், ஆனால் கடந்த 07 வருடங்களாக முன்னைய நிர்வாக காலங்களில் அது செயற்படவில்லை எனவும், பெரிய பள்ளிவாசல் தலைவர் ஹனீஸ் மேலும் தெரிவித்தார்.




