தலைப்புச் செய்திகள்

ஆயிரம் கிலோவுக்கும் அதிக எடையுடைய போதைப் பொருள் கடத்தியவர்களுக்கு, 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு

அதிகளவில் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் பிரஜைகள் 09 பேருக்கு – கொழும்பு மேல் நீதிமன்றம் 10 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.

2020 ஜனவரி 01 ஆம் திகதி பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரும் இலங்கை கடற்படையினரும் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் போது, 614 கிலோகிராம் ‘ஐஸ்’ (Crystal Methamphetamine) மற்றும் 581 கிலோ 34 கிராம் சந்தேகத்திற்கிடமான போதைப்பொருளை படகு மூலம் கொண்டு சென்ற பாகிஸ்தான் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட பொதிகளில் 491 கிலோகிராம் ‘கெட்டமைன்’ (Ketamine) போதைப்பொருள் மற்றும் கிட்டத்தட்ட 472 கிலோகிராம் ‘ஐஸ்’ (Crystal Methamphetamine) இருந்ததாக அரச பகுப்பாய்வாளரின் அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.

நீதிமன்றத்தில் குறித்த வழக்கு – விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர், இதனையடுத்து அவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும், தண்டனையை நிறைவேற்றும் வகையில் சந்தேக நபர்களை பாகிஸ்தானுக்கு நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.